

அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் உள்ள வீட்டின் கதவு படபடவென்று தட்டப்படுகிறது. வெளியே கனத்த காலணிகளின் அதிர்வுகள் கேட்கின்றன. பதில் வராததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர். அனைவரின் கையிலும் துப்பாக்கிகள். அந்த வீட்டில் இருந்த 6 வயது கியூபச் சிறுவனைப் பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு வெளியேறுகிறார்கள். வெளியில் கூடியிருக்கும் அமெரிக்க வாழ் கியூபர்கள் அமெரிக்காவுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். எலியன் கோன் சலஸ் எனும் அந்தச் சிறுவன், சில நாட்களுக்குப் பிறகு விமானம் மூலம் கியூபா அனுப்பிவைக்கப்படுகிறான். அங்கு அவனைக் கட்டித் தழுவிக்கொள்கிறார் அவனது தந்தை யுவான் மிகெல் கோன்சலஸ். ஒரு சிறுவனுக்காக அமெரிக்காவும் கியூபாவும் மல்லுக்கு நின்ற வரலாற்றுச் சம்பவம் அது. துப்பாக்கி முனையில் சிறுவன் ‘மீட்கப்படும்’ சம்பவத்தின் புகைப் படம், 2001-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதை வென்றது.
வசதியான வாழ்க்கைக்காக கியூபா வில் இருந்து அமெரிக்காவுக்குச் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்கள் உண்டு. 1999 நவம்பரில் எலியனின் அம்மா, தனது காதலருடன் சிறிய அலுமினியப் படகில் அமெரிக்காவுக்குப் பயணமானார். அவர்களுடன் எலியனும் மேலும் 10 பேரும் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படகு கவிழ்ந்ததில் எலியன் உட்பட 3 பேர் தவிர, மற்ற அனைவரும் கடலில் மூழ்கினர். அந்தப் பக்கம் வந்த மீனவர்கள் மூவரையும் காப்பாற்றி அமெரிக்கக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இதற் கிடையே, தனது மனைவி தன்னிடம் சொல்லிக்கொள்ளமலேயே எலியனைக் கூட்டிச் சென்றார் என்றும், மகனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் யுவான் மிகெல் கோன்சலஸ் கூறினார். அப்போது எலியன், மியாமியில் இருந்த அவனது உறவினர்களின் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தான். யுவானின் கோரிக்கைக்குப் பின்னர், இரண்டு நாடுகளும் சட்டப் போராட்டத்தில் இறங்கின. இறுதியில் எலியனை அவனது தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஃபுளோரிடா குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக அமெரிக்க வாழ் கியூபர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததால், ஆயுதப் படைகளின் உதவியுடன் சிறுவன் வெளியேற்றப்பட்டான். கியூபா சென்ற டைந்தபோது அவனை வரவேற்க அன்றைய அதிபர் பிடல் காஸ்ட்ரோவே வந்திருந்தார்.
இன்று 21 வயதாகும் அந்த எலியன், அந்தச் சம்பவத்தை நினைத்தாலே வேதனையாகவும் கூச்சமாகவும் உணர்வதாகச் சொல்கிறான். எனினும், தன் தந்தையுடன் நிம்மதியாக வாழ்கிறான் எலியன். அவனுக்கு இன்னொரு தந்தையும் கிடைத்துவிட்டார். அவர்தான் கியூபாவின் முன்னாள் அதிபரும் அந்நாட்டின் மாபெரும் தலைவருமான பிடல் காஸ்ட்ரோ.