

மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவரும் மனநல சிகிச்சைகளில் மனிதாபிமான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்துக்கு வழிகாட்டியவருமான பிலிப் பீனல் (Philippe Pinel) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் (1745) பிறந்தார். தந்தை போலவே இவரும் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். மான்ட்பெல்லியர் மருத்துவக் கல்லூரியில் 4 ஆண்டுகள் மருத்துவ மேற்படிப்பு படித்தார். 1778-ல் பாரீஸ் வந்தார்.
l சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறை. இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத பீனல் சுமார் 15 ஆண்டுகாலம் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பல்வேறு வேலைகளைப் பார்த்தார். கணிதம் பயின்றார். மருத்துவக் கட்டுரைகளை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்தார்.
l மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் நோய் முற்றி தற்கொலை செய்துகொண்டது இவரை வெகுவாக பாதித்தது. மன நோய் குறித்த ஆய்வில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது.
l மனநோய் விவகாரங்களைக் கையாள்வதில் உள்ள குறைபாடுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று கருதினார். பாரீஸில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது மனநோயின் இயல்புகள், சிகிச்சை குறித்த தனது கருத்துகளை முறைப்படுத்தத் தொடங்கினார்.
l பழம்பெரும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸை முன்மாதிரியாகக் கொண்டார். பிரெஞ்சு புரட்சி முடிவுக்கு வந்த பிறகு, இவரது நண்பர்கள் அதிகாரத்துக்கு வந்தனர். பீஸெட் மருத்துவமனையில் மருத்துவராக 1793-ல் நியமிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை 2 ஆண்டுகள் தொடர்ந்து தினமும் பலமுறை சந்தித்தார். அவர்களைப் பற்றிய குறிப்புகளை தொகுத்தார்.
l ‘மெமோர் ஆன் மேட்னஸ்’ என்ற கட்டுரையை 1794-ல் வெளியிட்டார். தற்போது இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப் புத்தகமாக உள்ளது.
l ஹாஸ்பிக் டி லா சல்பேட்ரயர் என்ற மருத்துவமனையில் தலைமை மருத்துவராக 1795-ல் நியமிக்கப்பட்டார். இறுதி வரை அங்கு பணிபுரிந்தார். மனநோய் குறித்த ஒரு அதிகாரப்பூர்வமான வகைப்பாடு புத்தகத்தை 1798-ல் வெளியிட்டார்.
l மனநோய் என்பது தொடர்ச்சியான நோய் அல்ல. மனநோயாளிகளை குணப்படுத்த மனிதநேயம்தான் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். கட்டப்பட்டிருந்த சங்கிலிகளில் இருந்து மன நோயாளிகளை விடுவித்தார். அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு, சிகிச்சையில் மனிதாபிமான, மனோதத்துவ அணுகுமுறையை மேம்படுத்தினார்.
l எல்லா மன நோய்களும் ஒன்றல்ல. மனச்சோர்வு, பித்து, புத்தி மாறாட்டம், பாமரத்தனம் என்று அதில் 4 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக கையாளப்பட வேண்டியவை என்று விளக்கினார். 1801-ல் எழுதிய ட்ரீட்டஸ் ஆன் இன்சானிட்டி என்ற நூலில் தனது உளவியல் ரீதியான அணுகுமுறை பற்றி விவரித்துள்ளார்.
l 19-ம் நூற்றாண்டின் பிரெஞ்ச், ஆங்கிலோ, அமெரிக்க மனநல நிபுணர்களிடம் இந்த நூல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘நவீன மனநல மருத்துவத்தின் தந்தை’ என போற்றப்படும் பிலிப் பீனல் 81 வயதில் (1826) மறைந்தார்.