

பின் தொடர்ந்து
வருகிறார்கள்
குடிநோயாளியை
ஒரு தாயோ
தங்கையோ
மனைவியோ
மகளோ
அடிப்பதற்கு
விரட்டுகிறான்
ஞானமற்ற பாதகன்.
சுவர் முட்டி நிற்கிறான்
குடிநோயாளி
குடத்துக்குள் தலை
மாட்டிய நாய்.
தப்பிக்க நினைத்து
ஓடுபவனை
விரட்டி களைத்து விட்டு விடுகிறது
மதுமிருகம்.
வாழ்க்கையிடம்
கற்றுக்கொள்பவன்
குடிநோயாளி...
வாழ்க்கைக்கு
கற்றுத்தருபவன் குடியற்ற
வாழ்க்கைக்காரன்.
நாடெங்கும் ரசாயன
அடிமைகள் நோய்மை நிறைந்த வீதியெங்கும் நீதியின் மனப்பிறழ்வு.
வெளியே கடை
உள்ளே வினை.
சண்டையிட்டு
ஜெயிக்க முடியாமல்
கடிப்பட்டு தப்பிக்க
வழியறியாமல் திகைத்து
நின்றபோது தெரிந்தது -
போத்தல் கரடியாக
உருவாகியிருந்தது.
எல்லா பாலினத்திலும்
உண்டு
குடிநோயாளியெனும்
நான்காம் பாலினம்.
கண்காணிப்பு
கேமராவுக்கு
மேல்
சட்டைப் பொத்தானை
அவள் கழற்றியபோது
ஆறாவது கோப்பை
அருந்தலின் சாகச
கொண்டாட்டமிது.
அவனுக்கு எதுவும்
தெரியாது
அவனை சட்டத்தின்
கண்கள்
விடாது துளைக்கும்.
அவனா இதைச்செய்தான்
அவனே திகைப்பூட்டும்
சகதியில்
ஞாபகத்தின் வேர்கள்
உயிரோடு இருந்தும்
மரத்து போயிருந்தன
எல்லோருக்கும் தெரியும்
உடல் ஒவ்வாமை
குடிநோய்க்காரனின்
வெறிக்கு இது நடந்து விட்டது
இருப்பினும்
மன்னிப்பில்லை.
சுவாசத்துக்குள்
அவனறியாமல்
பதுங்கிக்கொண்டு
நாள்
பார்த்துக்கொண்டிருந்தது -
மது எனும்
திரவக் காட்டேரி.
குடி குடியைக் கெடுக்கும்
குடிப்பழக்கம்
உடல்நலத்தையும் கெடுக்கும் பின் எதற்கு
விற்கிறார்கள்.
போதையில்
தடுமாறுகிறான்
சத்தமாக பேசி
நிதானத்திற்கு
திருப்புகிறார் தந்தை!