

புரட்சிகளுக்கு மட்டுமல்ல... புரட்டுகளுக்கும் வித்திட்டு வருகிறது ட்விட்டர் சமூக வலைதளம் என்பதற்கான சான்றுதான், பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான நந்திதா தாஸ் குறித்து வியாழக்கிழமை பரவிய சர்ச்சை.
தமிழில் 'அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்', இந்தியில் 'ஃபயர், 1947 எர்த்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் நந்திதா தாஸ்.
அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2013-ம் ஆண்டு ஓர் ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், அலுவலக சூழல்களின் பெண்களின் நிலை தொடர்பான நடிகை நந்திதா தாஸின் கருத்தும் இடம்பெற்றிருந்தது.
அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில், "எல்லா ஆண்களும் பலாத்காரர் ஆவதற்கான சாத்தியம் உடையவர்களே" என்று நந்திதா தாஸ் கூறியதாக அடிக்கோடிடப்பட்டிருந்தது.
இப்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வுகள் சற்றே உயர்ந்துள்ள சூழலில், நந்திதாஸின் அந்தக் கருத்தை எவரோ ஒருவர் கிளறிவிட்டிருக்கிறார்.
அந்தக் கருத்துடனான நந்திதா தாஸின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வியாழக்கிழமை வெளியானது. அதை ட்விட்டரில் எவரோ பகிர்ந்து கலகத்தைக் கூட்ட, அது குறித்த விவாதம் பற்றியெறியத் தொடங்கியது.
நந்திதா தாஸ் கூறியதாகச் சொல்லப்படும் அந்தக் கருத்தும், அதையொட்டிய இணையவாசிகளின் நூற்றுக்கணக்கான விமர்சனப் பதிவுகளும் பரவத் தொடங்க, இந்த விவகாரம் வைரல் ஆனது.
அன்றாடம் முக்கியச் செய்திகளையோ, பிரபலங்களையோ மையப்படுத்தி ட்ரெண்டிங் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் ட்விட்டர் சமூகத்தில், நந்திதா தாஸ் எப்போதோ கூறியதாக சொல்லப்படும் வரிகளுக்கு எதிர்மறை கருத்துக்கள் கிளம்பின. #NanditaDasQuotes என்ற ஹேஷ்டேக்குடன் சரமாரியான வார்த்தைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன.
நந்திதா தாஸ் விளக்கம்
இந்த சர்ச்சை வலுவானதை உணர்ந்த நடிகை நந்திதா தாஸ் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அதில்,
"எனது கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது. எல்லா ஆண்களும் பலாத்காரர்கள் என்ற வகையிலான கருத்தை நான் ஒருபோதும் கூறவே இல்லை. ஏதோ ஒரு வாசகத்தை பொதுப்படுத்திப் பேசுவது முற்றிலும் முட்டாள்தனமாதாக தெரியவில்லையா? இது குறித்தெல்லாம் நான் விளக்கம் கூற வேண்டியுள்ளதே என்பதை நினைத்தால்தான் கவலையாக உள்ளது" என்றார்.
ஆனால், இந்த விளக்கத்துக்குப் பிறகும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ட்விட்டர் சமூகம் வழக்கம்போல் அர்ச்சனையைத் தொடர்ந்தது.
நந்திதா தாஸ் கூறிய விளக்கம் குறித்து அறிந்தும் அறியாமலும் அவர் தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஒரு தரப்பு வெகுண்டெழுந்தது.
அதேவேளையில், நந்திதா தாஸ் வாசகத்துக்கு 'கவுன்டர்' கொடுக்கும் வகையிலான எதிர்வாசகங்களை பரப்பத் தொடங்கியது மற்றொரு தரப்பு. "எல்லா நந்திதா தாஸ் வாசகங்களும் ஜோக் ஆவதற்கு சாத்தியமே", "ரயிலில் செல்லும் எல்லா பயணிகளுமே டிக்கெட் இல்லாமல் பயணிப்பதற்கு சாத்தியமே", "விளையும் எல்லா அரிசியும் சோறாக மாறுவதற்கு சாத்தியமே", "சிறுநீரக தானம் செய்ய முன்வருபவர்கள் அனைவருமே ஐ-ஃபோன் வாங்க சாத்தியமே", "எல்லா சிக்கன் தந்தூரியும் பட்டர் சிக்கன் ஆவதற்கு சாத்தியமே" என்றெல்லாம் கலாய்ப்பு கருத்துகள் கொட்டப்பட்டன.
இதேபோல், தொடர்ச்சியாக பலரும் தங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப கலாய்ப்புப் பதிவுகளை இடத் தொடங்கினர். இதனால், நாள் முழுவதும் இந்த விவகாரம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இதை, ஆரோக்கியமற்றப் போக்கு என்று நடுநிலை இணையவாசிகள் பலரும் கண்டிக்கத் தவறவில்லை என்பதும் கவனத்துக்குரிய அம்சம்.