Published : 01 Mar 2015 03:02 PM
Last Updated : 01 Mar 2015 03:02 PM

எம்.கே.தியாகராஜ பாகவதர் 10

தன் வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் (M.K.Thyagaraja Bhagavathar) பிறந்த தினம் இன்று (மார்ச் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மாயவரத்தில் (1910) பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரது சிறு வயதிலேயே குடும்பம் திருச்சியில் குடியேறியது. இவருக்கு இசையில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது.

* 10 வயதில் திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்தார். இவரது குரல் வளத்தைக் கண்ட வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தந்தார். நாடக ஆசான் நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றார்.

* 6 ஆண்டுக்குப் பிறகு, எம்.கே.டி.யின் மேடைக் கச்சேரி அரங்கேறியது. 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. ‘‘தியாகராஜன் ஒரு பாகவதர்’’ என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.

* 1926-ல் திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக நடித்தார். 1934-ல் இந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக வந்தது. படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார். படம் 9 மாதங்கள் ஓடியது. இதையடுத்து, தமிழ்த் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

* இவரது வெற்றிப் பயணத்தில் 1944-ல் ஒரு தடங்கல் ஏற்பட்டது. லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் எம்.கே.டி.க்கும் அவரது நண்பர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

* நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். 1948-ல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இவரது பாடல்கள் பிரபலமடைந்தன.

* எம்.கே.டி. மனித நேயம், தயாள குணம் கொண்டவர். மற்றவர்களின் உதவியை விரும்பாத அவர், வாழ்க்கையின் நெருக்கடிகளை கம்பீரமாக எதிர்கொண்டார்.

* அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன. பல கோடி மக்களின் இதயங்களில் அப்பாடல்கள் இன்னமும் எதிரொலிக்கின்றன. இவரது சிகையலங்காரம் ‘பாகவதர் கிராப்’ என்று புகழ்பெற்றது.

* தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டாராக’ பாகவதர் கருதப்படுகிறார். 1944-ல் வெளிவந்த இவரது ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்’ என்ற சாதனையைப் படைத்தது.

* தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 49 வயதில் உடல்நலக் குறைவால் (1959) மறைந்தார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x