

காலை நேர நெரிசலில் குமார் பஸ்ஸில் ஏறினான். தினமும் பைக்கில் அலு வலகம் சென்று வருபவன், அன்று வண்டியை சர்வீஸுக்கு விட்டதால் வேறு வழி இல்லாமல் பேருந்து பயணம். அன்று நல்ல முகூர்த்த நாள் வேறு. பேருந்தில் உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டே வந்தான்.
‘டிக்கெட், டிக்கெட்’ என்றபடி நடத்துநர் வந்தார். குமார் பத்து ரூபாய் தாளை கொடுத்து “முனிசிபல் ஆபீஸ் ஸ்டாப் கொடுங்க” என்றான் .
நடத்துநர் டிக்கெட்டையும் , மீதி சில்லறை யும் கொடுத்தவாறு கூட்டத்தில் முன்னே நகர்ந்து விட்டார். குமார் சில்லறையை எண்ணி பார்த்த போது, ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ரூபாய் நாணயமும் இருந்தது.
நடத்துநர் பத்து ரூபாய் தாளை, இருபது ரூபாயாக எண்ணி, எட்டு ரூபாய் சீட்டுக்கு மீதம் பன்னிரண்டு ரூபாய் கொடுத்திருப் பார் என்று நினைத்தவன், நடத்துநரிடம் பாக்கியை கொடுத்துவிடலாமா என்று எண்ணினான்.
ஆனால் மறுகணமே, இன்று பஸ்ஸில் வந்ததும் லாபம்தான் என்று சில்லறையை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
அன்று மாலை வீடு திரும்பியவனை வாச லில் மலர்ச்சியுடன் வரவேற்றனர் மனைவி சுமதியும், ஏழு வயது மகள் தாரிகாவும்.
“என்னங்க உங்க மகள் பண்ண நல்ல காரியத்தை கேளுங்க” என்ற சுமதியிடம், தாரிகா “இரும்மா, நான் சொல்றேன்” என்று ஆரம்பித்தாள்.
“இன்னக்கு, எங்களுக்கு கிளாஸ்ல கணக்கு பரீட்சை பேப்பர் கொடுத்தாங்கப்பா. என் பேர்ல எனக்கு எழுபது மார்க்தான் வந்துச்சு. ஆனா மிஸ் பார்க்காமல் எண்பது மதிப்பெண் போட்டிருந்தாங்கப்பா. மிஸ்கிட்ட சொல்லி மாத்திட்டேன். அவங்க என்னை குட் கேர்ள்னு சொன்னாங்க” என்றாள்.
“மார்க் கூட வந்தா என்னம்மா? அதை எதுக்கு கேட்ட?” என்றான் குமார்.
“நம்ம பொருள் நமக்கு கெடச்சா போதும். குறுக்கு வழியில வாங்குறது நிலைக்காதுன்னு நீங்க முன்னாடி எனக்கு சொல்லி இருக்கீங்கப்பா” என்றாள் தாரிகா.
இதைக் கேட்டதும் சவுக்கடி பட்டது போல உணர்ந்தான் குமார்.