இது தேர்வுக் காலம்!- தேநீர் கவிதை

இது தேர்வுக் காலம்!- தேநீர் கவிதை
Updated on
1 min read

பிரசவ அறையின் வெளியே

காத்திருக்கும் கணவனின் பதட்டம்

தேர்வறையினுள்ளே

கேள்வித்தாளுக்கு காத்திருக்கும் தருணத்தில்!

அதிகம் எழுதுவதில்லை

ஆனால் என் போல்

அதிக பேனா கொண்டு செல்பவனும்

எவனுமில்லை!

பிட் அடிக்கும் தில்லில்லை

பார்த்தெழுதியதும் இல்லை

இருந்தும் கைநடுக்கம் தீரவில்லை

பார்த்தெழுத விடாமல்

மறைத்தெழுதியதால்!

கூடுதல் விடைத்தாள்களை

வாங்கிக் கொண்டேயிருப்பாள்

குண்டு குண்டாக எழுதி

பக்கத்தை நிரப்பும் சந்திரா!

பிடிக்காத அறிவியல் தேர்வில்

குறைந்தபட்ச ஆறுதலாக

கண்காணிக்கும்படியான ஆசிரியை

கண்காணிப்பாளராக!

தேர்வு முடிந்து வீடு திரும்பியதும்

விட்டெறியப்படும் புத்தகத்திலிருந்து

தொப்பென உடைந்து சிதறும்

ஓராண்டு சோகம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in