

இயேசுவின் உடலைத் தனது மடியில் கிடத்தி துயரத்துடன் அமர்ந்திருக்கும் அன்னை மேரியின் ‘பியெட்டா’ சிற்பத்தை நேரில் பார்த்தவர்கள் பாக்கியவான்கள். அதை உருவாக்கியவர் இத்தாலி மறுமலர்ச்சிக் கலைஞர்களில் மிகச் சிறந்தவரும், புகழ்பெற்ற சிற்பங்களை உருவாக்கியவரும், சிறந்த கவிஞருமான மைக்கேலாஞ்சலோ. அந்தச் சிற்பத்துக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. மைக்கேலாஞ்சலோ தனது கையெழுத்தைப் பொறித்த ஒரே கலைப் படைப்பு அதுதான்.
உலகில் அதிகத் தாக்கம் தந்த மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கேலாஞ்சலோ, இத்தாலியின் காப்ரெஸ் கிராமத்தில் 1475-ல் இதே நாளில் பிறந்தார். அவரது முன்னோர்கள் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அரசில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. புளோரன்ஸ் குடியரசில் வளர்ந்த மைக்கேலாஞ்சலோ, தனது 13-வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை கற்கத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் இத்தாலியின் கலை மற்றும் கல்வி வளர்ச்சியின் மையமாக புளோரன்ஸ் இருந்தது. சிறுவனாக இருந்தாலும் அபாரமான கலைத் திறன் கொண்டிருந்த அவரைக் கண்டு வியந்த புளோரன்ஸின் ஆட்சியாளர் லாரென்சோ டெ மெடிஸி அவரைப் பெரிதும் ஊக்குவித்தார்.
பெர்ட்டோல்டோ டி கியோவான்னி எனும் சிற்பக் கலைஞரிடம் மைக்கேலாஞ்சலோ சிற்பக் கலையைக் கற்றுக்கொண்டார். பியெட்டா சிற்பத்தை உருவாக்கியபோது அவருக்கு வயது, 23-தான்! அன்னை மேரி, இயேசு ஆகிய இருவரது உருவங்களையும் ஒரே பளிங்குக் கல்லால் செதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். உடற்கூறியலில் அவருக்கு இருந்த ஆழமான அறிவு அவரது படைப்பாற்றலை மெருகேற்றியது.
அதன் பிறகு, 17 அடி உயரத்தில் ‘டேவிட்’ சிற்பத்தை உருவாக்கினார். இந்தச் சிற்பம் அவரது புகழை நிலைநிறுத்தியது. ஓவியப் பயிற்சி பெற்றவர் என்றாலும் தன்னை ஓவியர் என்று சொல்லிக்கொள்வதைவிட, சிற்பக் கலைஞர் என்று சொல்லிக்கொள்ளவே விரும்பினார் அவர். வாட்டிகன் நகரின் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தின் மேற்கூரைச் சுவரில் அவர் வரைந்த கூரை ஓவியங்கள் அவரது ஓவியத் திறமையைப் பறைசாற்றும்.
அவர் எழுதிய கவிதைகளில் சுமார் 300 கவிதைகள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலை மரபில் இலக்கியத்துக்கு ஷேக்ஸ்பியர், இசைக்கு பீத்தோவன் என்று ஒவ்வொரு துறையிலும் மகத்தான சாதனை புரிந்தவர்களின் வரிசையில், சிற்பக் கலை மற்றும் ஓவியத்துக்கு மைக்கேலாஞ்சலோதான் நினைவுகூரப்படுகிறார்.