Last Updated : 25 Mar, 2015 09:17 AM

 

Published : 25 Mar 2015 09:17 AM
Last Updated : 25 Mar 2015 09:17 AM

இன்று அன்று | 1965, 1967 மார்ச் 25: மார்ட்டின் லூதர் கிங்கின் இரண்டு பேரணிகள்!

அமெரிக்காவில் சமூக உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங், இரண்டு முக்கிய விஷயங்களுக்காக இதே தேதியில் ஊர்வலம் நடத்தியிருக்கிறார். ஒரு ஊர்வலம் கருப்பின மக்களின் உரிமைக்காக. மற்றொன்று, அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குள்ளான வியட் நாம் மக்களுக்காக!

மக்கள் உரிமைச் சட்டம் (சிவில் ரைட்ஸ் ஆக்ட்) 1964-ன்படி கருப்பின மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. எனினும், அலபாமா போன்ற தெற்கு மாகாணங்களின் அதிகாரிகள், கருப்பின மக்களை வாக்களிக்க விடாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்கள். வெள்ளை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் கொதித்துப்போயிருந்த கருப்பின மக்கள், தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதத்தில் அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

தெற்கு கிறிஸ்தவத் தலைமை அமைப்பு (எஸ்.சி.எல்.சி) மற்றும் மாணவர் அகிம்சை ஒருங்கிணைப்புக் குழு (எஸ்.என்.சி.சி) ஆகியவை இணைந்து, அலபாமா மாகாணத்தின் செல்மா நகரிலிருந்து அம்மாநிலத் தலைநகர் மாண்ட்கோமரிக்கு (சுமார் 50 மைல்!) நடைப்பயணமாகச் சென்று வாக்குரிமையைப் பதிவு செய்யும் போராட்டத்தை நடத்தின.

எஸ்.என்.சி.சி. அமைப்பைச் சேர்ந்த ஜான் லூயிஸ் மற்றும் எஸ்.சி.எல்.சி. அமைப்பின் ரெவெரண்ட் ஹோசியா வில்லியம்ஸ் தலைமையில் கருப்பினப் போராளிகள் 600 பேர் அமெரிக்க நெடுஞ்சாலை 80 வழியாக நடைபயணத்தைத் தொடங்கினார்கள். எட்மண்ட் பெட்டஸ் பாலத்தைக் கடந்து வந்த அந்தப் போராட்டக் குழுவினர், டல்லாஸ் கவுண்ட்டிக்குள் நுழைந்தார்கள். அப்போது குண்டாந்தடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் சகிதம் போலீஸார் சாலையில் அவர்களை எதிர்கொண்டார்கள்.

அப்போது கருப்பின மக்களின் பேரணி சற்று நேரம் நின்றது. திடீரென்று, வெறி கொண்டவர்களைப் போல் போலீஸார், நின்றுகொண்டிருந்தவர்களைப் பிடித்துத் தள்ளியபடி முன்னேறினார்கள். பலவந்த மாகத் தள்ளிச்செல்லப்பட்ட கருப்பின மக்களில் பலர் கீழே விழுந்தனர். அவர் களை வெள்ளையின போலீஸாரின் குண்டாந்தடிகள் இரக்கமின்றித் தாக்கின. குதிரைகளில் அமர்ந்திருந்த வெள்ளையின போலீஸாரும் தாக்குதலில் இறங்கினர். கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். மோசமாகக் காயமுற்ற 17 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு முழுவதும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானபோது அமெரிக் காவே அதிர்ந்தது. கருப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள்; சக மனிதர்களை இப்படியா நடத்துவது என்று மனசாட்சி கொண்ட வெள்ளையின மக்களும் கோபமடைந்தனர். இந்த நிகழ்வு ‘ரத்த ஞாயிறு’ (பிளடி சன்டே) என்று அழைக் கப்படுகிறது. வெள்ளையின அதிகாரிகளின் அத்துமீறலுக்கு அப்போதைய அதிபர் லிண்டன் பி. ஜான்ஸன் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, எஸ்.சி.எல்.சி. தலைவர் மார்ட்டின் லூதர் கிங் களத்தில் இறங்கினார்.

1965 மார்ச் 21-ல் அவரது தலைமையில் தொடங்கிய நடைப்பயணம் மார்ச் 25-ல் மான்ட்கோமரி நகரில் முடிவடைந்தது. போராட்டத்தின் முடிவில் ‘ஹவ் லாங், நாட் லாங்’ எனும் தலைப்பில் அவர் நிகழ்த்திய உரை சரித்திரப் புகழ் மிக்கது. அமெரிக்க அதிபரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வெள்ளையின மக்களும் கருப்பின மக்களின் பக்கம் நின்றதால், கருப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.

வியட்நாம் மீது அமெரிக்கா நடத்திய போர் காரணமாக, அமெரிக்க மக்கள் அதிருப்தியடைந்திருந்த நேரம் அது. 1967-ல் இதே நாளில் சிகாகோவில் போருக்கு எதிரான 5,000-க்கும் மேற்பட்ட போராட்டக் காரர்களுடன் பேரணி நடத்தினார் மார்ட்டின் லூதர் கிங். “வியட்நாம் மீதான போர், அமெரிக்க தேசத்தின் கொள்கைகளைக் கொச்சைப்படுத்தும் செயல்” என்று முழங்கினார். அத்துடன் ஏழை மக்கள், கருப்பினத்தவர்கள் ஆகியோருக்கான நலத்திட்ட நிதியை வியட்நாம் போருக்காக அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 1975-ல் வியட்நாம் போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆனால், இந்தச் செய்தியை அறிய மார்ட்டின் லூதர் கிங் அப்போது உயிரோடு இல்லை.

1968 ஏப்ரல் 4-ல் நிறவெறி கொண்ட வெள்ளையர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x