Published : 26 Mar 2015 10:18 AM
Last Updated : 26 Mar 2015 10:18 AM

ஒரு நிமிடக் கதை: வேலை

“அண்ணி, தொழிலதிபர் அன்பு சார் நாளைக்கு அண்ணனை வரச்சொல்லி இருக்காரு. போய் பார்க்க சொல்லுங்க. நிச்சயம் அவர் ஆரம்பிக்கப் போற புது கம்பனியில அண்ணனுக்கு நல்ல வேலை போட்டு தருவாரு…!” - ரமேஷ் சொல்ல சித்ரா முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத் தில் அதை ரமேஷ் கவனிக்க வில்லை.

“என்னக்கா… மாமா பிசினஸ்ல அடிப்பட்டு இவ்ளோ நாளா வருமானத் துக்கு கஷ்ட்டப்பட்டுக்கிட்டு இருந்தாரு. இனி உங்களுக்கு எந்தக்குறையும் இல்லைதானே?!” ரமேஷின் மனைவி ஷைலஜா சித்ராவிடம் வந்து கேட்க, சித்ரா எதுவும் சொல்லாமல் கடைவீதிக்கு கிளம்பி போனாள்.

சைலஜாவுக்கு அக்கா ஏன் அப்படி நடந்துக்கொண்டார்கள் என்று புரியவில்லை. கஷ்டப்பட்ட காலத்தில் எல்லாம் தன்னிடம் ஆசையாக பேசும் அக்கா, இன்று அவரது குடும்பத்துக்கு ஒரு நல்லது நடக்கும் நேரத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?...

கடைவீதிக்கு சென்ற சித்ரா திரும்பி வந்ததும் அதுபற்றி சைலஜா கேட்டாள். அதற்கு சித்ரா சொன்ன பதில் சைலஜாவை யோசிக்க வைத்தது. சித்ராவின் ஆதங்கம் சைலஜாவுக்கு நியாயமாக பட, கணவன் ரமேஷ் வீடு திரும்பியதும் அதுபற்றிக் கேட்டாள்.

“என்னங்க… நாளைக்கு சங்கர் மாமாவை அன்பு சாரைப் போய் பார்த் துட்டு வரச் சொன்னீங்களாமே. நீங்களே அவரை உங்க கூட அழைச்சுட்டுப் போய் அன்பு சார்கிட்ட அறிமுகப்படுத்தினா என்ன? அது மாமாவுக்கு கொஞ்சம் கவுரவமா இருக்காதா?... மாமா தனியா போனா அன்பு சார் பி.ஏ. கூப்பிடற வரை அவர் வெளியில காத்திருக்க வேண்டி வருமே? சித்ராக்கா காலையில இதை எங்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப் பட்டாங்க.”

சைலஜா சொல்லி முடிக்கும் வரை அதை அமைதியாக கேட்டுக்கொண் டிருந்த ரமேஷ் அவள் அமைதியானதும் பேசத் தொடங்கினான்.

“சைலு, நீயும் அண்ணி மாதிரியே என்னை புரிஞ்சுக்கலைன்னா எப்படி? அன்பு சாருக்கு நான் யார்? அவருடைய ஆடிட்டர். அவருக்கு நம்ம அண்ணன் யார்? அவர்கிட்ட வேலை செய்யப்போற தொழிலாளி. நான் அண்ணனை அவர் கிட்ட அழைச்சுட்டுப் போனா என்னா கும்ன்னு நினைச்சு பார். என்னை அவர் டேபிளுக்கு முன்னாடி இருக்கிற நாற்காலி யில உட்கார வெச்சுட்டு, அண்ணனை நிக்க வெச்சு பேசலாம். நான் உட்கார்ந் துக்கிட்டு… அண்ணனை நிக்க வெச்சு பார்த்தா அது நல்லாவா இருக்கும்?... அதுக்காகத்தான் அவரை தனியா போய் பார்க்கச் சொன்னேன்!”

சைலஜாவின் மனதில் அவள் கணவன் இன்னும் உயரத்துக்கு போனான்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x