Published : 24 Mar 2015 10:12 AM
Last Updated : 24 Mar 2015 10:12 AM

முத்துஸ்வாமி தீட்சிதர் 10

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துஸ்வாமி தீட்சிதர் (Muthuswami Dikshitar) பிறந்த தினம் இன்று (மார்ச் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 திருவாரூரில் (1775) பிறந் தவர். வைத்தீஸ்வரன் கோயில் முருகப் பெருமான் அருளால் பிறந்தவர் என்பதால், முத்துக்குமார ஸ்வாமி என்று பெற்றோர் பெயரிட்டனர். தந்தை ராமஸ்வாமி தீட்சிதரிடம் முறைப்படி வாய்ப்பாட்டு, வீணை பயின்றார். இனிமை யாகப் பாடுவார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.

 வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்), காவியம் ஆகிய அனைத்தையும் 16 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார். இளமையிலேயே இறைவனைப் பற்றி பாடல்கள் இயற்றத் தொடங்கினார்.

 திருவாரூர் கோயிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார். காசியில் சிதம்பர யோகி என்பவருடன் 5 ஆண்டுகள் வசித்தார். அவரிடம் இசை யோடு தத்துவ ஞானமும் பயின்றார். அவர் சொன்னபடி கங்கையில் மூழ்கி எழுந்த இவருக்கு இறைவன் அருளால் வீணை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

 முருகப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். முருகனையே தன் குருவாக ஏற்றவர். இவரது பாடல் களில் ‘குருகுஹ’ என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது.

 தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியுள்ளார். இதன்மூலம் அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட இவரது கீர்த்தனைகள் உள்ளன. பலமுறை புனித யாத்திரைகளை மேற்கொண்டு, பல தெய்வங்களைக் குறித்தும் கீர்த்தனைகளைப் பாடினார். இந்தியாவில் இவரது காலடி படாத இடங்களே இல்லை்.

 இவரது பாடல்களில் கோயில்களின் வரலாறு, அவற்றின் பின்னணி ஆகிய தகவல்களும் உள்ளன. மேற்கத்திய இசையிலும் இவருக்கு ஞானம் இருந்தது.

 இசையில் ஆரம்பப் பயிற்சி பெறுபவர்கள் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் இவரது பாட்டு இருக்கும். அதேநேரம், நன்கு தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சபாக்களில் விஸ்தாரமாக பாடவும் ஏற்றவையாக இருக்கும். அது இவரது கீர்த்தனைகளின் சிறப்பம்சம்.

 இவரது வாழ்வில் பல தெய்வீக அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன. இவர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. வறட்சி நிலவிய கிராமத்தில் அமிர்தவர் ஷினி ராகத்தில் கீர்த்தனை பாடி மழையை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் ‘அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர்’ என்று போற்றப்பட்டார்.

 ஏறக்குறைய 500 பாடல்களை இயற்றியுள்ளார். இறைவ னைப் பற்றி மட்டுமே பாடியுள்ளார். மன்னர்களையும் மனிதர்களையும் புகழ்ந்து பாடியதில்லை. 64-வது நாயன்மார், 13-வது ஆழ்வார் என்றெல்லாம் புகழப்பட்ட முத்துஸ்வாமி தீட்சிதர் 60 வயதில் (1835)இறைவன் திருவடியை அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x