இன்று அன்று | 2005 மார்ச் 30: மலையாள எழுத்தாளர் ஓ.வி. விஜயன் நினைவு தினம்

இன்று அன்று | 2005 மார்ச் 30: மலையாள எழுத்தாளர் ஓ.வி. விஜயன் நினைவு தினம்
Updated on
2 min read

மலையாள இலக்கியத்தை ‘கசாக்கிண்டெ இதிகாசம்’ நாவலுக்கு முன்னர், அந்நாவலுக்குப் பின்னர் என்று இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்பவர்கள் உண்டு. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ‘ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்’ (தனிமையின் நூறு ஆண்டுகள்) நாவலுக்கு இணையான நாவல் என்று இலக்கிய உலகத்தினரால் பாராட்டப்படும் நாவல் இது. மிகப் பெரும் தாக்கத்தைத் தந்த படைப் பான இந்நாவலை எழுதியவர் ஓ.வி. விஜயன். நுணுக்கமான மொழிநடையும், விரிவான விவரணையும் இவரது எழுத்தின் பலம். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர் என்று பன்முகம் கொண்ட படைப் பாளியாக இயங்கியவர் இவர்.

பாலக்காடு மாவட்டத்தின் விளையஞ் சாத்தனூர் கிராமத்தில் 1930 ஜூலை 2-ல் பிறந்தார். அவரது தந்தை ஓ. வேலுக்குட்டி, மலபார் சிறப்புக் காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். குறைமாதத்தில் பிறந்ததால் குழந்தைப் பருவத்திலிருந்தே நோய்வாய்ப் பட்டிருந்த விஜயனின் தொடக்கக் கல்வி வீட்டிலேயே அமைந்தது. தனது 12-வயதில்தான் அவர் பள்ளியில் சேர்ந்தார். அதுவரை தனி ஆசிரியர்கள் கொண்டு அவர் பயின்ற கல்வி நேரடியாக 6-வது பாரத்தில் சேர அவருக்குக் கைகொடுத்தது. பாலக்காட்டின் விக்டோரியா கல்லூரியில் இளங்கலை பயின்ற அவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கோழிக்கோட்டில் உள்ள மலபார் கிறிஸ்தவக் கல்லூரியில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணி யாற்றிய பின்னர், பத்திரிகைத் துறைக்குள் நுழைந்தார்.

1958-ல் டெல்லியில் ‘சங்கர்ஸ் வீக்லி’ இதழில் கேலிச்சித்திரக்காரராகத் தனது பணியைத் தொடங்கினார் விஜயன். அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதிவந்தார். 1963-ல் ‘பேட்ரியாட்’ இதழில் சேர்ந்தார். ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ மற்றும் ‘தி இந்து’ ஆகிய நாளிதழ்களிலும் பணியாற்றியிருக்கிறார். ஹாங் காங்கிலிருந்து வெளிவரும் ‘ஃபார் ஈஸ்டர்ன் எகனாமிக் ரெவ்யூ’ மற்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ ஆகிய இதழ்களிலும் இவரது கேலிச் சித்திரங்கள் வெளியாகியிருக்கின்றன. 1953-ல் இவரது முதல் சிறுகதை (டெல் ஃபாதர் கன்சால்வஸ்) வெளியானது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதிய விஜயன், 1969-ல் தனது முதல் நாவலான ‘கசாக்கிண்டே இதிகா’சத்தை வெளியிட்டார்.

பாலக்காடு அருகே உள்ள தசரத் கிராமத்தில் இவரது தங்கை ஓ.வி. சாந்தா ஓராசிரியர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த போது, அவருடன் விஜயன் அந்தக் கிராமத்தில் தங்கியிருந்தார். அந்தக் கிராமத்தில் அவர் எதிர்கொண்ட மனிதர்கள், அவர்களது வாழ்வு, ஓராசிரியர் பள்ளிகளின் நிலை என்று பல்வேறு விஷயங்களை அவதானித்த விஜயன், தனது அனுபவங்களை நாவலாக விரித்தார்.

கசாக் என்னும் ஊருக்கு ஆசிரியராக வரும் ரவி என்பவரின் இருத்தலியல் தேடல்களையும் அலைக்கழிப்புகளையும் அவரது வருகை அந்த ஊரில் நிகழ்த்தும் சலனங்களையும் நாவல் விவரிக்கிறது. மனிதனின் இருப்புக்கான காரணம் என்ன என்ற ஆதாரமானதும் நிரந்தர மானதுமான கேள்விக்கு விடை தேடும் முயற்சி யாகவும் இந்நாவலை மதிப்பிடுகிறார்கள்.

‘மாத்ருபூமி’ இதழில் தொடராக வெளிவந்த பின்னர் இதை நாவலாகத் தொகுத்தார் விஜயன். ‘கரன்ட் புக்ஸ்’ என்னும் பதிப்பகம் 1969-ல் இந்த நாவலை வெளியிட்டது. மிகவும் புகழ்பெற்ற இந்த நாவல் பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 1994-ல் ‘தி லெஜண்ட்ஸ் ஆஃப் கசாக்’ எனும் பெயரில் ஆங்கிலத்தில், ஓ.வி. விஜயனே மொழி பெயர்த்தார். சமீபத்தில், காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக ‘கசாக்கின் இதிகாசம்’ எனும் பெயரில் (தமிழில்: யூமா வாசுகி) வெளியாகி யிருக்கிறது இந்த நாவல்.

தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயத்தி, பிரவச்சகந்தே வழி உள்ளிட்ட நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.

சாகித்ய அகாடமி, பத்மபூஷண் (2003-ல்) உள்ளிட்ட விருதுகளை வென்ற ஓ.வி. விஜயன், தனது 75-வது வயதில் காலமானார். நீண்ட நாட் களாக பார்க்கின்ஸன்(நடுக்குவாதம்) நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ‘கசாக்கிண்டெ இதிகாசம்’ நாவல் எழுதக் காரணமாக இருந்த தசரத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப் பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in