இன்று அன்று | 1913 மார்ச் 5: கங்குபாய் ஹங்கல் பிறந்த தினம்

இன்று அன்று | 1913 மார்ச் 5: கங்குபாய் ஹங்கல் பிறந்த தினம்
Updated on
1 min read

இந்துஸ்தானி இசைக் கலைஞர்களில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கங்குபாய் ஹங்கல். இந்துஸ்தானி இசையைப் பரவலாக்கியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

‘கிரானா கரானா’ எனும் இந்துஸ்தானி இசை மரபில் புகழ்பெற்ற மிகச் சில பெண் கலைஞர்களுள் ஒருவர் இவர். இந்தியா முழுவதும் நூற்றுக் கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இசைக் கச்சேரிகளை அவர் நடத்தி யிருக்கிறார். வெளிநாடு களிலும் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இந்திய மரபிசையின் பெருமையைப் பரப்பியவர் இவர். தேவதாசி மரபில் வந்த பெண்ணான இவர், ஆதிக்க சாதியினரும் ஆண்களும் ஆதிக்கம் செலுத்திய இசை உலகில் தனக்கான இடத்தை, தனது கடும் உழைப்பின் மூலமும் அளப்பரிய இசைஞானம் மூலமும் அடைந்தவர்.

ஒருமுறை இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கொல்கத்தா சென்றிருந்த இவரைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவர் பாடுவார் என்றே நம்பவில்லையாம். மெலிந்த உடலுடன் புடவை உடுத்தி வந்திருந்த அந்த இளம் பெண், தான் யார் என்பதை மேடையில் நிரூபித்தார். நடிகை நர்கீஸின் தாயாரும் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற பாடகியுமான ஜதன்பாயுடன் இணைந்து அவர் பாடினார்.

அவரது தீர்க்கமான குரலால் கவரப்பட்ட ஜதன்பாய், மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் இவர் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

கர்நாடகத்தின் தார்வாட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், 1913-ல் இதே நாளில் பிறந்தார் கங்குபாய். அவரது அம்மா அம்பாபாய் கர்நாடக இசைக் கலைஞர். அம்பாபாயின் இசைத் திறனை, கிரானா கரானா மரபிசைப் பாடகரான அப்துல் கரிம் கான் வெகுவாகப் பாராட்டுவாராம்.

தனது மகளுக்கு கர்நாடக இசையைப் பயிற்றுவிக்க முயன்றார் அம்பாபாய். எனினும் கங்குபாய்க்கு இந்துஸ்தானி இசையில் ஆர்வம் இருந்ததை அறிந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இதற்காக ஹூப்ளியில் உள்ள கணேஷ்பேட் பகுதியில் குடியேறினார் அம்பாபாய். அப்துல் கரிம் கானின் சீடர் கிருஷ்ணமாச்சாரி ஹல்குருவிடம் இசை பயின்றார் கங்குபாய். குடும்பத்தில் வறுமை நிலவினாலும் தனது மகளின் இசையார்வத்தை அம்பாபாய் தடைசெய்யவில்லை. கிரானா கரானா இசையின் மகத்தான ஆளுமைகளுள் ஒருவரான சவாய் காந்தர்வாவிடம் இசை பயின்றார் கங்குபாய்.

இசையின் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்த இவர், 90- வயது ஆன பின்னரும் தளராமல் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பல்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்தார். எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 2009 ஜூலை 21-ல் மரணமடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in