

தேச விடுதலைக்காகவும் ஆத்ம பரிசோ தனைக்காகவும் மக்களுக்காகவும் 15 முறைக்கும் மேல் தன்னை வருத்திக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் காந்தி. கோட்சேவால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன்னர்கூட, இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியும் பிரிவினையின்போது செய்யப் பட்டிருந்த உடன்படிக்கையின்படி பாகிஸ் தானுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய ரூ. 55 கோடியை ஏமாற்றாமல் கொடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் இருந்தவர் அவர்.
அடக்குமுறைக்கு ஆளான ராஜ்கோட் மக்களின் உரிமைகளுக்காக 1939-ல் இதே நாளில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் காந்தி. இதே ராஜ்கோட்டில்தான் அவர் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பாரிஸ்டர் பட்டம் பெற்று, லண்டனில் இருந்து திரும்பி வந்த பின்னர், பாம்பேயில் சிறிதுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய காந்தி, அதன் பிறகு குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில்தான் தனது மனைவி கஸ்தூர்பாவுடன் வசித்தார். அதன் பின்னர்தான், அவர் தென்னாப்பிரிக்கா சென்றார். அவரது தந்தை கரம்சந்த் காந்தி, ராஜ்கோட்டின் திவானாகப் பணிபுரிந்தவர். அந்த அளவுக்கு காந்தியின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது ராஜ்கோட்.
அந்தக் காலகட்டத்தில் சமஸ்தானமாக இருந்த பிரதேசம் அது. அதன் குடிமக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்துப் போராடிய பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, ராஜ்கோட்டின் அரசியலமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என்று சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வல்லபபாய் படேலின் மகள் மணிபென் படேல், காந்தியின் மனைவி கஸ்தூர்பா உள்ளிட்ட பெண்களும் சிறை வைக்கப்பட்டனர். இதையடுத்து, காந்தி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.
முன்னதாக, ‘அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்காக ஒரு கமிட்டி உருவாக்க வேண்டும்; அதில் ராஜ்கோட் ஆட்சி யாளரின் தரப்பிலிருந்து 4 பேரும், காந்தி தரப்பிலிருந்து 5 பேரும் இடம்பெற வேண்டும். இந்தக் குழு பரிந்துரைக்கும் மாற்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான மக்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கை களை ராஜ்கோட் சமஸ்தான அரசிடம் முன் வைத்திருந்தார் காந்தி.
அந்தக் கோரிக்கைகளை சமஸ்தான அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து, உண்ணா விரதம் இருக்க வேண்டிய கட்டாயம் காந்திக்கு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் காந்திக்கு உடல்நிலையும் சரியில்லை. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவரது ஆதரவாளர்கள் அவரிடம் வேண்டிக் கொண்டார்கள். எனினும், கோரிக்கை நிறைவேறாமல் உண்ணா விரதத்தைக் கைவிட முடியாது என்று காந்தி தெரிவித்துவிட்டார். இதையடுத்து சமஸ்தானமும் ஆங்கிலேய அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தீர்வு காண்பதற்கு முன்வந்தனர்.
காந்தி, மேற்கு மாகாணங்களுக்கான பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியான இ.சி. கிப்ஸன், காந்தியின் உதவியாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் முடிவில், காந்தி முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், அதை ராஜ்கோட் சமஸ்தானம் அமல்படுத்த ஏற்பாடு செய்வதாகவும் இந்தியாவின் வைஸ்ராய் இரண்டாம் லின்லித்கோ பிரபு உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட முடிவெடுத்தார் காந்தி. 5 நாட்கள் எதையுமே உட்கொள்ளாமல், தனது முடிவில் உறுதியாக இருந்த காந்தி, ஆரஞ்சு பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, சிறையில் இருந்த கஸ்தூர்பாவுக்கு காந்தி எழுதிய கடிதம் முக்கியமானது. காந்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிந்த கஸ்தூர்பா, தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்ததுபற்றிக் கவலைப் பட்டு காந்திக்குக் கடிதம் எழுதினார்.
இதற்குப் பதில் எழுதிய காந்தி இவ்வாறு குறிப்பிட்டார்:
“ஒன்றுமில்லாததற்கு நீ கவலைப்படுகிறாய். கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்புக்காக நீ மகிழ்ச்சியடைய வேண்டும். இப்படியான சூழல் ஏற்படும் என்று எனக்கே தெரியாதபோது, உண்ணாவிரதம் இருப்பதுபற்றி உன்னிடமோ வேறு யாரிடமோ நான் எப்படி ஆலோசித்திருக்க முடியும்? கடவுள் உத்தரவிட்ட பின்னர், அதை ஏற்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?”