

இயற்பியல் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert Andrews Millikan) பிறந்த தினம் இன்று (மார்ச் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
* அமெரிக்காவின் இலி னாய்ஸ் மாநிலம் மோரி சன் நகரில் (1868) பிறந் தவர். இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா உயர்நிலைப் பள்ளியில் மில்லிகன் பயின்றார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, நீதிமன்றத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1891-ல் ஓபர்லின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். அப்போது கிரேக்கமும் கணிதமும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்கள்.
* இயற்பியல் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். 1893-ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1895-ல் மின் ஒளிர்வு தளங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
* மின்சாரம், ஒளியியல், மூலக்கூறு இயற்பியல் ஆகிய துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளை வெளியிட்டார்.
* 1909-ல் ஒற்றை எலக்ட்ரான் மூலம் கடத்தப்படும் மின்னூட் டத்தை தீர்மானிக்கும் தொடர் கட்ட சோதனைகளை நிகழ்த்தினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ரியர்சன் சோதனைக் கூடத்தில் துணை ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். அங்கு 1910 முதல் 1921 வரை பேராசிரியராகப் பணியாற்றினார்.
* பாடப் புத்தகங்கள் எழுதுவது, இயற்பியலை எளிமை யாகக் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். தனியாகவும் பிற வல்லுநர்களுடன் இணைந்தும் ஏராளமான புத்தகங்களை எழுதினார்.
* ஒளிமின் விளைவு தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள், கூற்றுகள் ஆகியவை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தன.
* எண்ணெய்த் துளி சோதனை மூலம் எலக்ட்ரானின் மின்சுமையை அளக்கும் ஆய்வு மற்றும் ஒளிமின் விளைவு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக 1923-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அப்போது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள், வானியல் ஆராய்ச்சிக் கருவிகளை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார்.
* பல கல்வி நிறுவனங்கள், இயற்பியல் ஆராய்ச்சி மையங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஏறக்குறைய 25 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அது மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் பல பள்ளிகள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* இறுதிமூச்சு வரை இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ராபர்ட் மில்லிகன் 85 வயதில் (1953) மறைந்தார்.