Published : 11 Mar 2015 11:11 AM
Last Updated : 11 Mar 2015 11:11 AM

ஒரு நிமிடக் கதை: நேரம்

சொன்னதைக் கேட்டு ராம ருக்கு டென்ஷன் ஜிவ்வென்று உடல் முழுவதும் பரவியது.

கமலா “நிஜமாத்தான் சொல்றியா கமலா?... நம்ம பொண்ணு ஜீவிதா நாலு மாசம் கர்ப்பமா இருக்காளா?”

“ஆமாங்க. அவளே தான் சொன்னா... அதைக்கேட்டதுல இருந்து எனக்கு கைகால் ஓடலீங்க. கடவுள் இப்படி நம்மளை மோசம் பண்ணிட்டாரே...?”

“கடவுளை ஏண்டி வம்புக்கு இழுக்குற... எல்லாம் நம்ம நேரம்...”

ராமர் சோர்வாய் சோபாவில் சரிந் தார். அருகில் வந்த கமலா, “ரெண்டு இல்ல மூணு மாசத்துல கல்யாணம் வெச்சுக்கலாம்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லி இருக்காங்க. இப்ப என்னங்க பண்றது?!”

“நானும் அதை நினைச்சுதான் கமலா கலங்கிப்போய் இருக்கேன். என்ன பண்றதுன்னு தெரியலை யே...!?” ராமர் சட்டையை அவிழ்த்து சோபா விளிம்பில் மாட்டியவாறு சொன்னார்.

“என்னங்க... மாப்பிள்ளை வீட்ல பேசி கல்யாணத்தை தள்ளிப்போட முடியுமான்னு கேளுங்களேன்... ப்ளீஸ்!”

“இதை எப்படின்னு நான் போய் சொல்றது?... பிரசவம் முடியற வரை எப்படிம்மா அவங்களை நாம சமாளிக்கிறது?... நம்மளை தப்பா நினைக்க மாட்டாங்களா?”

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கால்ல விழறதை தவிற வேற வழியே இல்லையே?... நாலுமாசம் ஆயிடுச்சுங்க. இனி எதுவுமே செய்ய முடியாதே?”

“சரி பேசிப்பார்க்கலாம். நீயும் என் கூட வா!”

ராமரும், கமலாவும் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றார்கள். நல்ல வேளை. மாப்பிள்ளை வீட்டில் இருந்தார். எடுத்த எடுப்பிலே ராமர் சுற்றி வளைக் காமல் விஷயத்துக்கு வந்தார்.

“சம்மந்தியம்மா... என்னை மன் னிச்சுடுங்க. என் பெரிய பொண்ணு ஃப்ரான்ஸ்ல இருக்காங்கறது உங்க ளுக்கு தெரியும். இப்ப அவ மாசமா இருக்காளாம். அவளுக்கு கல்யாணம் பேசி முடிக்கும் போதே அவங்க வீட்ல ‘உங்கப் பொண்ணுக்கு நீங்க எதுவும் செய்ய வேணாம்.

ஆனா, அவ உண்டாயிட்டா நீங்கதான் அவகூட போய் இருந்து பிரசவம் முடியற வரை கவனிச்சுக்கணும்’ன்னு சொல்லி இருந்தாங்க. இப்ப அவ கர்ப்பமா இருக்காளாம். உடனே கிளம்பி வரச்சொல்லி போன்ல பேசி இருக்காங்க.”

“சொல்லுங்க சம்மந்தி... நாங்க என்ன செய்யணும்?!” மாப்பிள்ளை யின் அம்மா கேட்க... தயங்கி சொல்ல வந்ததை சிறு தெம்புடன் ராமர் சொல்கிறார்... “வேற ஒண்ணுமில்லை சம்மந்தியம்மா... என் பெரிய பொண்ணு ஜீவிதா பிரசவம் முடிஞ்சு, நாங்க திரும்பி வர வரைக்கும் என் ரெண்டாவது பொண்ணு கல்யாணத்தை தள்ளிப்போடலாம்னு நினைக்கிறோம். நீங்கதான் பெரிய மனசு பண்ணணும்.”

“அட இதுக்குப் போய் நீங்க ஏன் இப்படி சங்கடப்படறீங்க. நல்ல விஷ யத்துக்காக கல்யாணத்தை தள்ளிப் போடறது ஒண்ணும் தப்பில்லையே... நீங்க ஃப்ரான்ஸுக்கு போக வேண்டிய வேலையைப்பாருங்க. நீங்க திரும்பி வரவரைக்கும் உங்க சின்ன மகள் எங்க வீட்டு மூத்த மகளா எங்க கூட வேணா இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு சம்மந்தியம்மா மகனைப் பார்த்து, “நீ என்னடா சொல்றே?..” என்று கேட்டார்.

“எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லம்மா. நானும் அதுக்குள்ள வெளி நாடு போய் ஆறு மாச படிப்பை முடிச்சுட்டு வந்துடறேன்!” என்றான்.

ராமருக்கும், கமலாவுக்கு சம்மந்தியம்மாவும், மாப்பிள்ளையும் தெய்வமாய் தெரிந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x