

எந்தச் சவாலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் ‘ஓ.கே. செய்துவிடலாம்’ என்று சொல்லும் நண்பர்களைச் சந்தித்திருப்போம். கிட்டத்தட்ட தமிழ் வார்த்தைகளில் ஒன்றாக ஆகிவிட்ட இந்த வார்த்தை ஆங்கிலத்தில் எப்போது புழக்கத்துக்கு வந்தது தெரியுமா? அதிகமில்லை, 175 ஆண்டுகளுக்கு முன்புதான். அதற்கு முன் இந்தியாவில் ராபர்ட் கிளைவ் கூட பிரிட்டன் அரச கட்டளைக்கு ‘ஓ.கே’எல்லாம் சொல்லியிருக்க மாட்டார். ஏனெனில், ‘ஓ.கே.’ ஒரு அமெரிக்கத் தயாரிப்பு.
சமூக வலைதளங்கள், அலைபேசிகளில் ஆங்கில வார்த்தைகளை ரத்தினச் சுருக்கமாக (ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன்!) எழுதும் இன்றைய இளைஞர்களைப் போல, 19-ம் நூற்றாண்டின் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில், வேண்டுமென்றே எழுத்துப் பிழையுடன் வார்த்தைகளைச் சுருக்கிப் பேசி, எழுதும் பழக்கம் இருந்தது.
உதாரணத்துக்கு, No use எனும் ஆங்கிலப் பதத்தை Know Yuse அதாவது KY என்று சொல்வார்கள் அமெரிக்க இளைஞர்கள். All right எனும் பதத்தை, Oll Wright (OW) என்பார்கள். அந்த வகையில், All Correct என்னும் பதம் அமெரிக்க வாய்களில் Oll correct என்று புழங்கியது. அதன் சுருக்க வடிவம்தான் O.K.!
ஆனால், இந்த வார்த்தை பிரபலமாகக் காரணம், 1839 மார்ச் 23-ல் ‘தி பாஸ்டன் மார்னிங் போஸ்ட்’ எனும் நாளிதழில் வெளியான நகைச்சுவைக் கட்டுரை. அந்த நாளிதழின் ஆசிரியர்தான் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். ‘ஆன்ட்டி பெல் ரிங்கிங் சொசைட்டி’ என்னும் அமைப்பைப் பற்றிய கட்டுரை அது. ‘டங்காமாரி’ மாதிரியான வார்த்தைகளைப் பிரபலப்படுத்துவதுபோல், ஓ.கே.-யைப் பிரபலப்படுத்த அப்போது திரைப்படங்கள் எல்லாம் வந்திருக்கவில்லை. அந்தப் பணியைச் செவ்வனே செய்தவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் முழங்கிய அரசியல் தலைவர்கள்தான். அமெரிக்காவின் அப்போதைய அதிபர் மார்ட்டின் வான் பியூரன் (ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்) மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். தனக்காகப் பிரச்சாரம் செய்ய அவர் ஏற்பாடு செய்த குழு ‘ஓ.கே. கிளப்’ என்று அழைக்கப்பட்டது. (நியூயார்க் அருகில் உள்ள கிண்டர்ஹூக் நகரைச் சேர்ந்த மார்ட்டினுக்கு, ‘ஓல்டு கிண்டர்ஹூக்’ என்னும் செல்லப் பெயர் உண்டு). இப்படியாக அரசியல் தலைவர்கள், அரசியல் கட்டுரைகள் வழியாக ஓ.கே. எனும் வார்த்தை நிலைபெற்று, அன்றாடப் புழக்கத்துக்கு வந்துவிட்டது.
எல்லாம் சரி, ஓ.கே.யின் மூலம் இதுதான் என்பது எப்படி நிறுவப்பட்டது? அதற்கு முழு முதற்காரணம், அமெரிக்க மொழியியல் அறிஞர் ஆலன் வாக்கர் ரீடு. நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்த ரீடு, ஓ.கே-யின் மூலத்தை ஆராய்ந்தார். அதற்கு முன்னர், இந்த வார்த்தை புழக்கத்துக்கு வருவதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அமெரிக்க உள்நாட்டுப் போரில் யூனியன் ராணுவ வீரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட ‘Orrin Kendall’ பிஸ்கட்டுகள்தான் காரணம் என்றனர் சிலர். தந்தி அனுப்பும் கருவியுடன் தொடர்புடைய ‘Open key’ எனும் சாதனம்தான் காரணம் என்றது ஒரு தரப்பு. ஆனால், இதுதொடர்பாகப் பல ஆண்டுகள் ஆய்வு செய்த ரீடு, 1963-ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘தி பாஸ்டன் மார்னிங் போஸ்ட்’ கட்டுரைதான் ஓ.கே-வின் மூலம் என்பதை நிறுவினார். அதேசமயம், செவ்விந்திய இனமான சோக்டா இனத்தைச் சேர்ந்தவர்கள் ‘okeh’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். கிட்டத்தட்ட இதே அர்த்தம்தான். அதுதான் மூலம் என்னும் வாதத்தையும் சிலர் முன்வைத்தார்கள்.
அப்போது ஆலன் வாக்கர் ரீடு இவ்வாறு சொன்னார்: “எதுவுமே இறுதியானதல்ல. இதுவும் நாளை மாறலாம்”!