

உலகப் புகழ்பெற்ற ஜனரஞ்சகமான நாவலாசிரியரும் திரைக்கதை, சிறுகதை எழுத்தாளருமான இர்விங் வாலஸ் (Irving Wallace) பிறந்த தினம் இன்று (மார்ச் 19). இவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து :
அமெரிக்காவின் இலினாயிசில் பிறந்தவர் (1916). யூதக் குடும்பத் தைச் சேர்ந்தவர். இவருடைய அப்பா ஒரு ஜெனரல் ஸ்டோரில் கிளர்க்காக வேலைபார்த்து வந்தார்.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது பள்ளி செய்தித்தாள்களில் நிருபராக பணியாற்றியுள்ளார். அப்போது தான் எழுதிய “தி ஹார்ஸ் லாஃப்” என்ற கட்டுரையை ஹார்ஸ் அன்ட் ஜாக்கி என்ற பத்திரிகைக்கு 5 டாலருக்கு விற்றார்.
பெர்கெலியில் உள்ள வில்லியம்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஆக்கபூர்வமான எழுத்து தொடர்பான கல்வி பயின்றார். அதன் பிறகு 1937-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற இவர், முழுநேர எழுத்தாளராக மாறினார்.
1940கள் மற்றும் 1950களில் பத்திரிகையில் எழுதுவதில் போதுமான வருமானம் ஈட்ட முடியவில்லை என்பதால், வார்னர் பிரதர்ஸ், 20-செஞ்சுரி ஃபாக்ஸ், யுனிவர்சல், ஆர்.கே.ஓ. மற்றும் பாராமவுண்ட் ஆகிய சினிமா நிறுவனங்களுக்கு திரைக்கதை எழுதத் தொடங்கினார். தி வெஸ்ட் பாயின்ட் ஸ்டோரி, ஸ்பிளிட் செகன்ட், மீட் மி அட் தி ஃபேர் உள்ளிட்ட பிரபல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு மரியாதையும் கவுரவமும் கிடைப்பதில்லை என்று கூறி தனது முழு நேரத்தையும் புத்தகங்கள் எழுதுவதில் செலவிட்டார். புகழ்வாய்ந்த பிரபலங்கள், மேதைகள், தொழிற்துறை நிபுணர்களை பேட்டி கண்டு, அவர்கள் வாழ்க்கையின் சுவையான தகவல்களைத் திரட்டி சுவாரஸ்யமாக எழுத்தில் வடித்தார்.
இவர் எழுதும் விஷயங்களை எல்லாம், சாட்டர்டே ஈவினிங் போஸ்ட், ரீடர்ஸ் டைஜஸ்ட், எஸ்கொயர் காஸ்மாபாலிட்டன் ஆகிய பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டன. 1946-ல் காலியர்ஸ் பத்திரிகைக்காக அரசி எலிசபெத்தையும், அரச குடும்பத்தினரையும் பேட்டி கண்டு சுவாரஸ்யமான கட்டுரை ஒன்று எழுதினார். இதற்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்தன.
இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றபோது, உயிரைப் பணயம் வைத்து, மாறுவேடத்தில் நாஜிக்கள் முகாமுக்குள் நுழைந்து பல திடுக்கிடும் ரகசியங்களைத் திரட்டினார். இந்த ரகசியங்கள் அடங்கிய கட்டுரை, உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1960-ல் இவர் எழுதிய “தி சாப்மான் ரிப்போர்ட்” என்ற நாவலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இவருக்கு நல்ல லாபம் பெற்றுத் தந்தது. 1962-ல் இது திரைப்படமாக வெளிவந்து அதிக வருவாய் ஈட்டித் தந்தது.
பரபரப்பூட்டும் உண்மை நிகழ்ச்சிகளைத் தேடித் தேடி எழுதினார். இவர் எழுதும் பாணி பாரம்பரிய இலக்கிய பாணியில் அல்லாமல், தனித்துவத்துடன் இருந்தன. பணத்தைவிட அங்கீகாரம்தான் முக்கியம் என்று கூறுவார்.
இவரது படைப்புகள் உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் விற்பனையில் சாதனை படைத்த புத்தகங்களில் இவரது பல நாவல்கள் இடம் பெற்றன. உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான வாகர்களின் மனதில் இன்றும் குடியிருக்கும் ஜனரஞ்சக படைப்பாளியான இர்விங் வாலஸ், 1990-ல் 74-ஆம் வயதில் காலமானார்.