சுட்டது நெட்டளவு

சுட்டது நெட்டளவு
Updated on
1 min read

ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் பொறுப்பேற்றார். அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம் மூன்று கவர்களைக் கொடுத்தார்.

“உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக வரிசைப்படி எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்” என்று கூறினார்.

ஒரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடம் இருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில், “நான் புதிதாக வந்தவன். எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்” என்று எழுதியிருந்தது.

அதேபோல அவரும், “நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால்தானே என்னால் எதுவும் செய்ய முடியும்” என்றார். வந்தவர்களும் அது நியாயம் என்று கருதி சென்று விட்டனர்.

அடுத்த ஓராண்டில் மீண்டும் ஒரு பிரச்சினை வந்தது. அப்போது இரண்டாவது கவரைத் திறந்து பார்த்தார். அதில், “முன்பு மேலாளர்களாய் இருந்தவர்களைக் குறை சொல்” என்றிருந்தது. உடனே அவரும், “பாருங்கள், நான் என்ன செய்வது? இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணிபுரிந்தவர்கள் என்னதான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது” என்றார். வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.

இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் ஒரு பெரிய பிரச்சினையைக் கிளப்பினார்கள். இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது.

உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார். அதில், “உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in