

பின்னணியில் மெலிதான இசையோடு கூடிய 'உன்னை நேசிக்கிறேன் அம்மா!' (LoveYouMa!) பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
காவல் துறையில் வேலை பார்க்கும் மகளின் உடையைத் தேய்க்கும் தாயின் முகத்தில், இஸ்திரிப் பெட்டி சூட்டின் வெம்மை படர்கிறது. மகள் 'நீ ஏன்மா இதெல்லாம் பண்ற?' என்னும் கேள்வியை முகத்தில் படரவிட்டுக் கொண்டே வேகமாய் வந்து இஸ்திரிப் பெட்டியை வாங்க எத்தனிக்கிறாள். மறுதலித்த தாய், காக்கிச் சட்டையை நீவிக் கொடுத்து அழகு பார்த்து, கம்பீரமாய் எடுத்துத் தன் மகளிடம் அளிக்கிறார்.
மற்றொரு தாயும் மகளும் கடற்கரையில் இருக்கின்றனர். பதின்ம வயதுக்கே உரிய துள்ளலுடன், கடலுக்குள் தன் தாயை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறாள் மகள். அச்சப்படும் தாயை அழகாய்க் கடலுக்குள் நடத்திச் செல்கிறாள். பயத்துடனேயே கடலின் அழகை ரசிக்கிறார் அம்மா. எதையோ சாதித்த நிறைவுடன் தன் தாயைப் பார்த்து வெடித்துச் சிரிக்கிறாள் மகள்.
வீட்டின் மேல்கட்டில் சமையல் செய்கிறார் ஏழைத் தாய். கூடவே அருகிலிருக்கும் கயிற்றை இழுத்து மின்சாரத்தை வரவழைத்து பல்பை ஒளிரச் செய்கிறார். கீழறையில் இருக்கும் தன் மகள் படிப்பதற்காய்ச் செய்த ஏற்பாடது. அறைக்குள் வெளிச்சம் பரவியது கண்டு சினேகமாய்ச் சிரிக்கும் மகளின் கண்களிலும் ஒளி.
அவசரமாய்ப் பரபரத்துச் செல்லும் மகளின் பின்னே வேகமாய்ச் செல்கிறார் அவளின் அம்மா. மக்கள் நெருக்கடியில் பத்திரமாய்த் தன் மகளின் கைகோத்து நடந்து செல்கிறார் அவர்.
வெளியூருக்குப் புறப்பட்டுச் செல்லும் இரு பெண்கள். செல்ல எத்தனிக்கும் அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வழியனுப்ப நினைக்கிறார் தாய். வேண்டாமென்கிற பாவனையில் தலையைப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் பெண்ணின் நெற்றி, தாயின் முகத்தைப் பார்த்த உடனேயே முன்னே நீள்கிறது. மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சந்தனமிட்டு, வாழ்த்தி அவர்களை வழியனுப்பி வைக்கிறார் அந்தத்தாய்.
அழகு நிலையத்தில் நீள முடியுடன், தலை பின்னி, பூச்சூடி அமர்ந்திருக்கிறார் அம்மா. எதிரே அவரின் மகள் முடி முழுதாய் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. சினேகமாய்த் தலையசைக்கும் தாயைப் பார்த்து, புரிதலின் அடையாளமாய்ப் புன்னகைக்கிறாள் மகள்.
மேற்சொன்ன அம்மா - மகளின் நேசத்தை வெளிக்கொணரும் எல்லாக் காட்சிகளும் உணர்வுபூர்வமாய்க் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன.
மகளிர் தினத்தையொட்டிய இக்குறும்படத்துக்கான பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் தன் மகளைக் கண்டு கண்கள் கலங்கியபடியே நெகிழ்வாய்ச் சிரிக்கும் அவரின் அம்மாவையும் சேர்த்து!
</p>