

எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
அழுதாலும் தொழுதாலும்
அதிலோர் எழுத்து அழிந்திடுமோ?
(மொழிபெயர்ப்பு: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
கடந்த 150 ஆண்டுகளாக உலகம் முழுவதையும் வசப்படுத்திக்கொண்டிருக்கும் கவிதைகளில் ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’துக்குத்தான் முதல் இடம். 11-ம் நூற்றாண்டில் ஈரானில் (அன்றைய கொரசான் ராஜ்ஜியம்) பிறந்து 12-ம் நூற்றாண்டில் மறைந்த ஒமர் கய்யாம் வானியலாளராக மிகவும் பிரபலமானவர். ஆனால், ஒரு கவிஞராக அவர் பிரபலமாவதற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்டு ஃபிட்ஸ்ஜெரால்டு (மார்ச் 31, 1809 ஜூன் 14, 1883) வர வேண்டியிருந்திருக்கிறது.
அது 1861-ம் ஆண்டு. பிரபல ஆங்கிலக் கவிஞரான ரோஸட்டி ஒரு பழைய புத்தகக் கடையில் தற்செயலாக ஒரு பொக்கிஷத்தைக் கண்டெடுத்தார். அதுதான் எட்வர்டு ஃபிட்ஸ்ஜெரால்டு மொழிபெயர்த்திருந்த ஒமர் கய்யாமின் ருபாயியத். பாரசீகத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் அது (ஒமர் கய்யாம் உருதுக் கவிஞர் அல்ல, பாரசீகக் கவிஞர்.) விற்காமல் கிடந்த அந்தப் புத்தகத்தை ரோஸட்டியும் அவரது கவிஞர் நண்பர்களும் வாங்கிப் படித்துப் பரவசமடைந்து தங்கள் வட்டாரத்தில் பிரபலமாக்கினார்கள். ஒமர் கய்யாம் தனது கல்லறையிலிருந்து எழுந்துவந்து உலகை மறுபடியும் ஆளத் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்த திருப்புமுனைச் சம்பவம் அதுதான்.
ஒரு மொழிபெயர்ப்பு இந்த அளவில் வெற்றியடைய முடியுமா என்று பலரும் ஃபிட்ஸ் ஜெரால்டின் மொழிபெயர்ப்பைக் கண்டு வியந்தார்கள். பாரசீக மொழியும் ஆங்கிலமும் அறிந்தவர்களோ ஃபிட்ஸ்ஜெரால்டின் மொழிபெயர்ப்பு நம்பகமானது அல்ல என்றும் அவர் நிறைய சுதந்திரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால், கவிதையைத் துய்ப்பவர்கள் நம்பகத் தன்மையைவிடக் கவித்துவத்துக்கே முதலிடம் கொடுத்ததால் பாரசீக மூலத்தில் என்ன இருந்தது என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
ஆங்கிலேயர்கள் ஃபிட்ஸ்ஜெரால்டின் ஒமர் கய்யாமைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார்கள். ஃபிட்ஸ்ஜெரால்டின் மொழிபெயர்ப்பு (அதாவது தழுவல்) வெளியான பிறகு அவரவரும் ருபாயியத்தின் தழுவலையோ மொழிபெயர்ப்பையோ வெளியிட ஆரம்பித்தார்கள். பகடி ஒமர் கய்யாம்கள் நிறைய பேர் உருவாக ஆரம்பித்தார்கள்.
ஒரு கணிப்பின்படி 20-ம் நூற்றாண்டின் தொடக் கத்தில் ஆங்கிலத்தில் அதிகமாக விற்பனையான கவிதைத் தொகுப்பு ‘ருபாயியத்’தான். அது எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டின் மொழிபெயர்ப்பு என்பது சொல்லத் தேவையில்லை. மேலை வாழ்வின் அவலத்துக்கும் அர்த்தமற்ற தன்மைக்கும் ஒமர் கய்யாமின் கவிதைகள் அருமருந்தாக விளங்கின. அந்த அருமருந்தை பாரசீகத்திலிருந்து எடுத்துத் தடவியவர் ஃபிட்ஸ்ஜெரால்டு என்பதால் ஒமர் கய்யாமுடன் அவரது பெயர் பிரிக்க முடியாத வகையில் ஒட்டிக்கொண்டது.
இன்று உலகம் ஒமர் கய்யாமை அறிந்திருப்பதற்கு ஃபிட்ஸ்ஜெரால்டுதான் காரணம். 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒமர் கய்யாமின் கவிதைகளில் பெரும்பாலானவை ஃபிட்ஸ்ஜெரால்டின் மொழிபெயர்ப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவைதான். அவ்வளவு ஏன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்புக்கும் ஃபிட்ஸ்ஜெரால்டின் மொழிபெயர்ப்பே அடிப்படை. ஃபிட்ஸ்ஜெரால்டின் மொழிபெயர்ப்பே ஒரு தழுவல் என்ற நிலையில் கவிமணியும் தழுவல் செய்திருப்பார். ஒமர் கய்யாமின் கவிதைகளில் கம்பரையெல்லாம் கொண்டுவந்து தமிழ் மணம் ஊட்டியிருப்பார்:
“வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு,
கலசம் நிறைய மதுவுண்டு…”
ஆக, தமிழுக்குக் கிடைத்தது தழுவலின் தழுவல்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உலகம் முழுக்க நூற்றுக் கணக்கான ஒமர் கய்யாம் கிளப்கள் இருந்தன. சுதந்திரச் சிந்தனையாளர்கள் கூடி ஃபிட்ஸ்ஜெரால்டின் ஒமர் கய்யாமைக் கலசம் நிறைய கவிதையுடன் கொண்டாடினார்கள். அந்தக் கலாச்சாரம் இன்றும்கூட தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
மொழிபெயர்ப்பு நூல் ஒன்று மொழிபெயர்க்கப்பட்ட மொழியின் நூலாகவே மாறிய அதிசயம் ஃபிட்ஸ்ஜெரால்டால் ‘ருபாயியத்’ விஷயத்தில் நடந்தேறியிருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டின் சிறப்பு மிக்க வெளியீடான ஆங்கிலக் கவிதைகளின் பெருந் தொகுதி முதலான தொகை நூல்களில் ஒரே ஒரு மொழிபெயர்ப்புக்கும் இடம்கொடுக்கப்பட்டது. அது ஃபிட்ஸ்ஜெரால்டின் ‘ருபாயியத்’தான். ஒமர் கய்யாம் ஆங்கிலக் கவிஞர் ஆன கதை இதுதான். அந்தக் கதையின் சூத்ரதாரி பிறந்த தினம் இன்றுதான்!