Published : 27 Mar 2015 10:36 AM
Last Updated : 27 Mar 2015 10:36 AM

ஸ்வாமி விபுலானந்தர் 10

தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவரும், இலக்கியம், சமயம் ஆகிய துறைகளில் வல்லுநருமான ஸ்வாமி விபுலானந்தர் (Swami Vipulandar) பிறந்த தினம் இன்று (மார்ச் 27). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைத்தீவு என்ற ஊரில் பிறந்தவர் (1892). இயற்பெயர் மயில்வாகனன். ஆரம்பக் கல்வியை கல்முனை மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியில் கற்றார். பின்பு மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் பயின்றார். தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றிருந்ததோடு கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளையும் அறிந்திருந்தார்.

 கந்தையா பிள்ளை என்பவரிடம் பண்டையத் தமிழ் இலக் கியம் பயின்றார். 1912-ல் ஆசிரியர் பயற்சிக் கல்வியை முடித்த பின் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

 1915-ல் கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ பெற்றார். பின்பு இயற்பியலில் பட்டம் பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இப்பட்டத்தைப் பெறுவது அதுவே முதல் முறை.

 1917-ல் யாழ்ப்பாணம் சம்பத்தரசியார் கல்லூரியில் பணிபுரிந்தார். 1928-ல் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். முறைப்படி இசை பயின்றவர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழை வளர்த்தார்.

 1922-ல் சென்னை வந்து ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்தார். மயிலாப்பூர் மடத்தில் பிரம்மச்சரிய தீட்சையும் சந்நியாச தீட்சையும் பெற்றார். ராமகிருஷ்ணா மிஷன் நடத்தி வரும் ராமகிருஷ்ண விஜயம் மற்றும் வேதாந்த கேசரி என்ற ஆங்கில பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து சிறப்பான பல கட்டுரைகள் எழுதினார்.

 ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவை மதங்க சூளாமணி என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 1914 முதல் 1947 வரை இவர் எழுதிய 170 கட்டுரைகள் 1995 -ல் 4 தொகுதிகளாக வெளிவந்தன. 1924-ல் ஸ்வாமி சிவானந்தர் இவருக்கு ஸ்வாமி விபுலானந்தர் என்ற துறவறப் பெயரை சூட்டினார்.

 அதன் பிறகு இலங்கைத் திரும்பிய இவர், அங்கே ராம கிருஷ்ணா மிஷன் மேற்கொண்டிருந்த கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். 1931-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

 தமிழ் இசை மற்றும் இந்திய இசை வடிவங்கள், இசைக் கருவிகள் குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, இவர் எழுதிய மிகவும் பிரசித்தி பெற்ற யாழ்நூல் 1947-ல் வெளிவந்தது. 1943-ல் இலங்கையில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராகப் பணியாற்றினார்.

 தமிழர்களின் வரலாறு, தமிழ் இலக்கி யம், தமிழ் இசை மற்றும் இசைக் கருவிகள், வேதாந்த தத்துவங்கள் குறித்த இவரது அற்புதமான உரைகள் இந்தியாவிலும் பல சர்வதேசப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.

 பாரதியாரிடம் மிகுந்த பற்று கொண்டு அவரைப் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழுக்கும், தமிழர் இசைக்கும், பெருந்தொண்டாற்றிய விபுலானந்த அடிகளார், 1947-ல் 55-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x