

சுதந்திரப் போராட்ட வீரராகவும், சிறந்த தேசப் பற்றாளராகவும் திகழ்ந்தவர் ஆச்சார்யா ஜீவத்ராம் பகவான்தாஸ் கிருபளானி. 1888 நவம்பர் 11-ல் (தற்போது பாகிஸ்தானில் உள்ள) சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரில் பிறந்தார்.
ஹைதராபாதிலேயே பள்ளிக் கல்வி கற்ற கிருபளானி, மும்பையில் உள்ள வில்ஸன் கல்லூரியில் மேல்படிப்பு படித்தார். தொடர்ந்து பூனாவின் பெர்குஸன் கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை பயின்றார். பிஹாரின் முசாஃபர்பூர் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் வரலாற்றுப் பேராசிரி யராகப் பணிபுரிந்தார்.
1917-ல் காந்தி நடத்திய சம்பரண் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது காந்தியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1920-ல் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக் கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்தி தொடங்கிய ஆசிரமங்கள் மூலம் கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்த நடவடிக்கை களில் ஈடுபட்டார். உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றார். இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாகக் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 1951-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறி கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சியைத் தொடங் கினார். பின்னர் தனது கட்சியை சோஷலிஸக் கட்சியுடன் இணைத்து, பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக் கினார்.
1962-ல் சீனாவுடனான போரில் இந்தியா தோற்றதைக் கண்டித்து, பிரதமர் நேரு மீது முதன்முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் இவர். அதேபோல், 1975-ல் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையின்போது அரசை விமர்சித்ததால் கைதுசெய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர். காந்தியின் மீது அளவற்ற பற்று கொண்டிருந்த கிருபளானி, ‘காந்தி: ஹிஸ் லைஃப் அண்ட் தாட்’ உட்பட பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
கிருபளானியின் மனைவி சுசேதா கிருபளானியும் அரசியல் தலைவர் தான். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசேதாதான் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் முதல்வர். தனது வாழ்க்கையில் பல அரசியல், சமூக மாற்றங்களைக் கண்ட கிருபளானி 1982-ல் இதே நாளில் மறைந்தார்.