

வயோதிகம் தரும் தனிமை துயரம் மிக்கது. வயோதிகத்தின் தனிமையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவல்கள் ஏராளம். அவற்றுள் குறிப்பிடத் தக்க படைப்பு ‘தி ஓல்டு மேன் அண்ட் தி சீ’. உடலிலும் மனதிலும் மிச்சமிருக்கும் பலத்தைக் கொண்டு, பரந்து விரிந்த கடலில் வயோதிகர் ஒருவர் மேற்கொள்ளும் சாகசம் குறித்துப் பேசும் நாவல் இது. அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய இந்நாவல், 1953-க்கான புலிட்சர் விருதை வென்றது. 1954-ல் அவர் நோபல் பரிசு வெல்வதற்கும் முக்கியக் காரணமாக இந்நாவல் இருந்தது.
பல நாட்களாக எந்த மீனையும் பிடிக்க முடியாமல் வெறும் வலையுடன் திரும்புவதால் துரதிருஷ்டசாலியாகக் கருதப்படும் முதிய மீனவர் சாண்டியாகோ, பிறரது கேலிகளைப் பொருட்படுத்தாமல் கடலுக்குச் செல்கிறார். அவரது தூண்டிலில் சிக்கும் மார்லின் வகை மீன் அவர் இதுவரை பிடித்த மீன்களைவிட மிகவும் பெரியது. கடலில் அவரை அலைக்கழித்துவிடுகிறது மீன். அது இழுத்த இழுப்புக்குப் படகு செல்கிறது. மூன்று நாட்கள் அதனுடன் போராடும் சாண்டியாகோ, அந்த மீனைக் கரைக்குக் கொண்டுவருகிறாரா இல்லையா என்பதுதான் கதை.
இந்த நாவல், எழுதுவதற்கு 10 ஆண்டுகாலத்தில் குறிப்பிடத் தக்க படைப்பு எதையும் ஹெமிங்வே எழுதியிருக்கவில்லை. இடையில் வெளியான அவரது ‘Across the River and into the Trees’ (1950) நாவல் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. அதனால், அவரது ரசிகர்களும் விமர்சகர்களும் அவரிடமிருந்து ஒரு சிறந்த படைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த நாவலை எழுதினார் ஹெமிங்வே. ஒருவகையில், தனது இலக்கிய வெற்றிகள் மூலம் தான் அடைந்த எல்லையற்ற புகழையும் எழுத்தாற்றலையும் தக்க வைத்துக் கொள்வதற்கான ஹெமிங்வேயின் தவிப்புதான், பிரம்மாண்ட மீனுடனான சாண்டியாகோவின் போராட்ட மாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 1952-ல் இதே நாளில் இந்த நாவலை எழுதி முடித்த ஹெமிங்வே, பதிப்பகத்துக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்: ‘இதுதான் நான் எழுதியதில் மிகச் சிறந்த படைப்பு.’
1961 ஜூலை 2-ல் ஐடஹோ மாகாணத்தின் ஹெட்சம் நகரில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார் ஹெமிங்வே. தனது மரணத்துக்கு முன்னர் அவர் எழுதிய கடைசிப் படைப்பு இந்நாவல். சார்லஸ் ஸ்க்ரிப்னர்ஸ் சன்ஸ் எனும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட, 27,000 வார்த்தைகளே கொண்ட இந்தச் சிறிய நாவல், முதலில் ‘லைஃப்’ வார இதழில் வெளியானது. அதாவது, 20 சென்ட்டுக்கு விற்கப்பட்ட வார இதழில். “என் நாவலை வாங்க முடியாதவர்கள்கூட ‘லைஃப்’ வார இதழை வாங்கி அதைப் படிக்க முடியும் என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம்” என்று ஹெமிங்வே குறிப்பிட்டார்.