

ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்!
ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்!
ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு.
குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே அன்பு!
குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே இதயம்!
குழந்தைகள் சொல்கின்றன: கடவுளுக்கு நன்றி கூறித் துதிப்போம்!
குழந்தைகள் சொல்கின்றன: ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு.
…
நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான் (ஒரே இதயம்தான்)
தனது சொந்த நம்பிக்கைகளைக் காத்துக்கொள்ள
உலகையே காயப்படுத்திய
நம்பிக்கையிழந்த பாவிக்கு இந்த உலகத்தில் இடம் இருக்கிறதா?
…
ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு
ஆதியில் இருந்ததுபோலவே (ஒரே அன்புதான்!)
இறுதியில் வருவதைப் போலவும்தான் (ஒரே இதயம்தான்!).
சரிதானே!
கடவுளுக்கு நன்றி சொல்லித் துதிப்போம்!
ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு.
இன்னொரு விஷயம்!
…
ஒன்றாய் ஈடுபடுவோம் இந்தப் புனிதப் போரில் (ஒரே அன்புதான்!)
அவர் வரும்போது அழிவென்பது ஏது? (ஒரே பாடல்தான்!)
மீட்சியே அற்றுப்போனவர்கள்மீது இரக்கம் காட்டுங்கள்;
படைத்தவரிடமிருந்து ஒளிந்துகொள்ள முடியாது.
…
மனிதர்களே உங்களிடம் இறைஞ்சுகிறேன்! (ஒரே அன்புதான்!);
இறைவா, (ஒரே இதயம்தான்) ஊஊ…
பாப் மார்லியின் மிகவும் பிரபலமான ‘ஒன் லவ் ஒன் ஹார்ட்’ பாடலிலிருந்து…
பாப் மார்லி. ஏழ்மையான நாட்டில், எளிமையான பின்னணியில் வளர்ந்து, உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்தவர். கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை விட்டுத் தாண்டாத ரெக்கே வகை இசையை உலகின் வரைபடத்தில் இடம்பெறச் செய்த மகா கலைஞர்.
ஜமைக்காவின் செயின்ட் ஆன் நகர் அருகில் உள்ள நைன் மைல் எனும் கிராமத்தில் 1945 பிப்ரவரி 6-ல் பிறந்தார். அவரது தந்தை நார்வல் சிங்ளேர் மார்லி வெள்ளையினத்தைச் சேர்ந்தவர். தேயிலைத் தோட்டத்தில் மேலாளராகப் பணிபுரிந்த 60 வயது நார்வல் 18 வயதான செடெல்லாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பாப் மார்லி பிறந்த சில நாட்களிலேயே மனைவியையும் மகனையும் விட்டுப் பிரிந்தார் நார்வல். வறுமையில் வளர்ந்த பாப் மார்லிக்கு, இசையின் மீது காதல் பிறந்தது. அவரது வகுப்புத் தோழன் ஓ’ரெலி லிவிங்ஸ்டனுடன் இணைந்து இசை கற்றுக்கொள்வது, பாடல்களை எழுதிப் பாடுவது என்று இசைபட வளர்ந்தார்.
நண்பர்களுடன் இணைந்து ‘வெய்லர்ஸ்’ என்னும் இசைக் குழுவை உருவாக்கினார். 1961-ல் லெஸ்லீ காங் எனும் இசைத்தயாரிப்பாளர் இவரது இசையில் ‘ஜட்ஜ்நாட்’ என்னும் இசைத் தொகுப்பைக் கொண்டுவந்தார். 1963-ல் வெளியான ‘சிம்மர்ஸ் டவுன்’ பாடல் அமெரிக்காவிலும் பிரபலமானது. ‘சோல் ரெபல்ஸ்’, ‘கேட்ச் எ ஃபயர்’, ‘எக்ஸோடஸ்’, ‘சர்வைவல்’என்று புகழ்பெற்ற ஆல்பங்களை வெளியிட்டார். உலகமெங்கும் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
கிட்டாரைக் கையில் ஏந்தி, உன்மத்தம் பிடித்தவர்போல் தலையை உயர்த்தி, கண்களை மூடிக்கொண்டு அவர் பாடுவதைப் பார்க்கும்போது, அடுத்தவர் வேதனையை உள்வாங்கிக்கொண்டு அவர்களுக்காகப் பிரார்த்திப்பதுபோல் இருக்கும். ஜமைக்கா மக்களை மிகவும் நேசித்தார் மார்லி. தேர்தல் காரணமாக மோதிக்கொண்ட ‘மக்கள் தேசியக் கட்சி’ மற்றும் ‘ஜமைக்கன் தொழிலாளர் கட்சி’தலைவர்களை ஒரே மேடையில் அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இருவரையும் கைகோக்கச் சொல்லியபடி அவர் ஆடிப்பாடியது ஜமைக்கா அரசியலில் மறக்கவே முடியாத நிகழ்வு. ‘ஒன் லவ்’ எனும் அந்தப் பாடலை, மில்லினியத்தின் பாடலாகப் பின்னாட்களில் பிபிசி தேர்ந்தெடுத்தது. ஜிம்பாப்வே விடுதலை அடைந்தபோது, அந்நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தினார் மார்லி. அரசியல் பகையின் காரணமாக அவரைச் சுட்டுக்கொல்லவும் முயற்சி நடந்தது. புகழின் உச்சியில் இருந்த மார்லி, புற்றுநோய் தாக்கி தனது 36-வது வயதிலேயே மரணமடைந்தார். மக்களின் கலைஞராகவே வாழ்ந்து மறைந்த அந்த மேதைக்கு, 2001-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருது வழங்கப்பட்டது. அவரது பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடுகிறது ஜமைக்கா!
- சரித்திரன்