

பள்ளி மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குச் சிக்கவைத்து அவர்களது இளமையை சிதைத்து சின்னாபின்னமாக்கும் இந்தப் பாலியல் பலாத்காரருக்கு, அப்பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சூறையாடியது குறித்த எந்தக் கவலையும் இல்லை.
தனியே வரும் இளம்பெண்ணிடம் தன் முழுபலத்தைக் காட்டுவதுதான் இவருக்கு முழுநேர ஒரு பொழுதுபோக்கு. என்றாலும் பொதுமக்களிடம் அடிவாங்கி இப்போது அவர் வந்து விழுந்துகிடக்கும் இடம் அரசு மருத்துவமனை. அங்கு வந்தும்கூட சிகிச்சை செய்ய வந்த பெண் மருத்துவரிடம் ஆணவமான பேச்சு... அகங்காரமான வாக்குவாதம்.
"படிக்கற பொண்ணுங்க பழகுற ஆணுங்ககிட்ட எப்படி நடந்துகிட்டாலும் யாரும் கேட்கறதில்லை. எங்கள மாதிரி ஆளுங்க அவங்க மேலே ஆசைப்பட்டாத்தான் பிரச்சனைய பெரிசாக்குது இந்தச் சமூகம்... அதெப்படி எங்களைப் பத்தி போலீஸ்ல புகார் கொடுப்பாங்க? அதுக்கப்பறம் அந்த பொண்ணை யார் கட்டிக்குவாங்க..." என்று நக்கலடிக்கும் இவர் கூறுவது, தங்கள் கலாச்சார காரணங்களுக்காக
வருத்தப்பட வேண்டியது பெண்கள்தானாம். நகரத்தை சுற்றி வருவது, அரைகுறையாய் ஆடை அணிவது என்று ஏடாகூடமான சப்பைக்கட்டுகள்.
ஏன் இப்படியெல்லாம் செய்யறீங்க என பெண் மருத்துவர் கேட்கும்போது, "வந்த வேலைய பாத்துட்டு போய்ட்டே இரு'', "நான் அப்படித்தான் செய்வேன்", "என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது, நான் யார் தெரியுமா? என் பலம் என்ன தெரியுமா?", "நீ கூட தனியா வந்துபாரேன்... நான் யாருன்னு காட்டறேன்" என்றெல்லாம் அவர் திமிரானப் பேச்சுகள் எகிறத்தான் செய்கிறது.
அதற்கு, சிரித்துக்கொண்டே அந்தப் பெண் மருத்துவர் சொல்கிறார்... "கொஞ்சம் அந்த போர்வை விலக்கிட்டு கீழே குனிஞ்சு பார்."
அவர் கையைவிட்டுப் பார்க்கிறார்... திடீரென்று அவருக்கு ஆணவம் அகங்காரம் திமிரெல்லாம் திமிறிக்கொண்டு போகிறது.
அப்படி என்னதான் நேர்ந்தது அந்த 'பெருமித' பலாத்காரருக்கு?
இந்தக் குறும்படத்தைப் பாருங்கள்... எண்ணி இரண்டே இரண்டு பாத்திரங்களை வைத்து இயக்குநர், தலைவிரித்தாடும் சமூகப் பிரச்சனையொன்றை அலசிப் பிழிந்து காயப்போட்டது தெரியும்!
</p>