

சாதிக்க துடிப்பவர்களின் வாழ்வில் சிலசமயம் சறுக்கி விழுவது போன்ற விபத்துகள் நேர்கின்றன. அது காலத்தின் கோலமாகவும், கவனக்குறைவின் விளைவாகவும் உடலியல் பின் உபாதைகளாகவும் பலநேரங்களில் உருவெடுத்து நிற்கின்றன நம்மில் பலருக்கும்.
நாட்டியத் தாரகையாக மின்னவேண்டிய 7 வயதேயான தமிழகத்தின் சுபிக்ஷா சந்திரனுக்கு கல்லீரல் பழுதாக ஆரம்பித்ததால் அவளது உற்சாகம் பாதியில் அறுந்துவிடுகிறது.
தடகளப்போட்டியில் தங்கம் வெல்லத்துடிக்கும் 19 வயதேயான பஞ்சாப் வீராங்கனை ரூபிசிங்கின் இதயம் ஏனோ திடீரென செயலிழக்க ஆரம்பித்துவிட வெற்றி, ஆசைகள் வெற்று ஆசைகளாகும் ஆகிவிடுகிற வேதனை.
காண்போர் கண்களுக்கு விருந்தளிக்க விரும்பி கனவுகளைக் குழைத்து காட்சிகளாய்த் தீட்டும் 37 வயதான மேற்கு வங்கத்தின் வண்ணத் தூரிகைக் கலைஞன் தனுஜ்தாஸுக்கு விபத்தில் கண்கள் பார்வை பறிபோய் விட்டதால் கலைமனம் கலையிழக்கிறது.
முகத்துவாரக் கால்வாய்கள் நிறைந்த கேரள மனிதர் சோமன் நாயருக்கு 64 வயதுதான் என்றாலும் மகன் ஏறிச்செல்லும் படகை எளிதாக நீரில் செலுத்திட ஒரு கைகொடுக்கவும் முடியாமல் போனதற்கு வருந்துகிறார். சிறுநீரகம் வேலைநிறுத்தம் செய்ததுதானே தவிர வயது ஒரு காரணமல்ல என்பதும்கூட ஒரு வலிதான்.
இவர்களெல்லாம் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. தினைத்துணையாய் உதவி செய்தவர்கள் வந்து இடுக்கண் களைந்ததால் இன்று இவர்களின் எல்லாக் கனவுகளும் நிறைவேறுகின்றன.
நல்ல செயல்களே நறுமணமாய்த் திகழ்பவர்கள் உறுப்புதானம் செய்ததன்மூலம் இது சாத்தியமாயிற்று. இறந்தாலும் எங்கேயோ இருந்துகொண்டு இன்னொருவர் உயிரைக் காக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உறுப்புதானம் செய்யும் எண்ணம் உதிக்க துணை சேர்க்கிறது இந்த இயக்குநர் விஜய் உருவாக்கிய உருகவைக்கும் வீடியோ பதிவு:
</p>