

கர்ப்பிணிகள் உட்கொள்ளும் மருந்துகள் ஆபத்தானவையாக இருந்தால், அதன் விளைவுகள் அவர்களுடன் முடிந்துவிடுவதில்லை. அந்த மருந்தின் விபரீத விளைவுகளால் பெரிய அளவில் பாதிக்கப் படுபவர்கள் பிறக்கும் குழந்தைகள்தான். அப்படியான துயர நிகழ்வு இது. கர்ப்பிணி களுக்குக் காலை நேரத்தில் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தவும், தூக்கம் தரும் மருந்தாகவும், 1957 அக்டோபர் 1-ல் அறிமுகப்படுத்தப்பட்டது தாலிடோமைடு எனும் மருந்து. ஜெர்மனியைச் சேர்ந்த ‘செமி க்ருனெந்தால்’ எனும் மருந்து உற்பத்தி நிறுவனம் அறிமுகப்படுத்திய மருந்து இது. ‘கான்டெர்கான்’ என்னும் வர்த்தகப் பெயரில் உலகமெங்கும் இந்த மருந்து விற்பனை யானது. அந்தக் காலகட்டத்தில் கர்ப்பிணி களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டே பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் இயங்கின. அப்பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல்நிலையில் அம்மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
தாலிடோமைடு மருந்தை உட்கொண்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள், கடுமை யான பாதிப்புகளுடன், உடல் குறைகளுடன் பிறந்த பின்னர்தான், அதன் பின்னே இருந்த ஆபத்து உலகுக்குத் தெரியவந்தது. மிகச் சிறிய கை, கால்களுடன், ‘ஃபோகோமேலியா’ எனும் பாதிப்புடன் குழந்தைகள் பிறந்தன. காதுகள், மூக்கு, மண்டையோடு, கழுத்து போன்ற உறுப்புகளிலும் அதன் பாதிப்பு இருந்தது. ஜெர்மனியில் மட்டும் சுமார் 7,000 குழந்தைகள் இந்த பாதிப்புடன் பிறந்தன. அந்தக் குழந்தைகளில் 40%தான் உயிர் பிழைத்தன என்பது மற்றொரு சோகம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டன. அவர்களில், 50% குழந்தைகள் உயிரிழந்தன.
இந்தக் கொடூர பாதிப்புக்கு நஷ்டஈடு கேட்டு பல நாடுகளின் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றன. ஆனால், முதன்முறையாக பிரிட்டனில்தான் இதுதொடர்பாக நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டது.
‘டிஸ்ட்டில்லர்ஸ் பயோ கெமிக்கல்ஸ்’ எனும் நிறுவனம் இந்த மருந்தை அந்நாட்டில் தயாரித்து விற்பனை செய்திருந்தது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நஷ்டஈடு கேட்டு தொடர்ந்த வழக்கில், 1968 பிப்ரவரி 19-ல், 1.5 மில்லியன் பவுண்டுகள் வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளின் நீதிமன்றங்களில் இதுதொடர்பாகத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
அதேசமயம், உயிர்பிழைத்த குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருந்தது? உண்மையில், தங்கள் குறைபாடுகளைத் தாண்டியும் வாழ்க்கையில் போராடி சிலர் வெற்றி பெற்றிருக் கிறார்கள். பல்வேறு துறைகளில் சாதனை செய்திருக்கிறார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் நிக்கோ வான் க்ளாஸோ (தாலிடோமைடு குழந்தைகள் பற்றிய ‘நோபடி இஸ் பெர்ஃபெக்ட்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியவர்), புகழ்பெற்ற இசைக் கலைஞர் மேட் ஃப்ரேஸர், வானொலி அறிவிப்பாளர் ஆல்வின் லா போன்றோர் தாலி டோமைடு பாதிப்புடன் பிறந்தவர்கள்தான்!