

அமெரிக்காவின் 40-வது அதிபரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகருமான ரொனால்டு வில்சன் ரீகன் (Ronald Wilson Reagan) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் டாம்பிகோ நகரில் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போதே கதை கூறுதல், நடித்தல், விளையாட்டு ஆகிய வற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். யுரேகா கல்லூரியில் பொருளாதாரம், சமூகவியலில் மேற்படிப்பை முடித்தார்.
வானொலி நிலையங்களில் பணிபுரிந்தார். விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனத்தில் 1937-ல் சேர்ந்தார்.
இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 1939-ம் ஆண்டுக்குள் 19 திரைப்படங்களில் நடித்துவிட்டார். டார்க் விக்டரி, சான்டா ஃபே டிரையல் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தன. அப்போது, ராணுவத்தில் இருந்து அழைப்பு வந்தது. திரையுலக வாழ்வு, அந்தஸ்தை துறந்து ராணுவத்தில் சேர்ந்தார். செகண்ட் லெப்டினென்ட் பதவியை அடைந்தார். மீண்டும் நடிப்புலகுக்குத் திரும்பியவர் பல படங்கள் நடித்தார்.
சான்பிரான்சிஸ்கோ போக்குவரத்து துறையில் அதிகாரி யாகப் பணிபுரிந்தார். 1964-ல் அரசியலில் நுழைந்தார்.
பொதுவுடைமை, சோஷலிசக் கொள்கைகள், இன வேறுபாடு ஆகியவற்றை எதிர்த்தார். ஆரம்பத்தில் இருந்தே அணு ஆயுத எதிர்ப்புவாதியாகத் திகழ்ந்தார். தனி மனித உரிமைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது அவரது கொள்கை. கலிபோர்னியாவில் மிகவும் பிரபலமானார். அங்கு 2 முறை ஆளுநராக இருந்தார்.
1980-ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இவருக்கு வயது 69. இதுவரை அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர்களில் இவர்தான் மூத்தவர். அதிபராக இருந்தபோது, அமெரிக்கப் பொருளாதாரத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். ராணுவத்தை விரிவாக்கினார். அமெரிக்காவில் முதன்முதலில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினார்.
இவரது ஆட்சிக் காலத்தில் ஈரானியப் போர் உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடந்தன. 1981 மார்ச் மாதம் இவரைக் கொல்ல நடந்த முயற்சியில் குண்டடிபட்டு நூலிழையில் தப்பினார். 1984 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, 2-வது முறையாக அதிபரானார்.
பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்’ என்ற அமெரிக்காவின் உயரிய விருதை 2 முறை பெற்றுள்ளார். வாஷிங்டன் விமான நிலையம், அமெரிக்கக் கடற்படைக் கப்பல், விமானப் படை விமானம் ஆகியவற்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேசிய அருங்காட்சியகத்தில் இவரது வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
இவரது பிறந்த நாளான பிப்ரவரி 6-ம் தேதியை இன்றளவும் ‘ரீகன் தினம்’ என்று கொண்டாடி மகிழ்கின்றனர் கலிபோர்னியா மாநில மக்கள்.
ஊடகங்கள், ராணுவம் என பல துறைகளில் பணியாற்றி நாட்டின் அதிபராக உயர்ந்து அனைத்து துறைகளிலும் திறம்பட செயல்பட்ட ரொனால்டு ரீகன் 2004-ல் 93 வயதில் மறைந்தார்.