Published : 04 Feb 2015 10:24 AM
Last Updated : 04 Feb 2015 10:24 AM

பண்டிட் பீம்சேன் ஜோஷி 10

பிரபல இந்துஸ்தானி பாடகர் பண்டிட் பீம்சேன் குருராஜ் ஜோஷி (Pandit Bhimsen Gururaj Joshi) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர். 16 பிள்ளைகள் கொண்ட குடும்பத் தின் மூத்தவர் இவர். சிறு வயதில் அப்துல் கரீம்கான் பாட்டால் கவரப்பட்ட இவர், தானும் இசைக் கலைஞனாக விரும்பினார்.

 தெருவில் இசைக் குழுவினர் பாடுவதைப் பார்த்துவிட்டால், சிறுவன் பீம்சேன் அவர்கள் பின்னாலேயே போய்விடுவான். வெகுதூரம் சென்ற பிறகு, கிடைத்த இடத்தில் தூங்கிவிடுவான். அடிக்கடி அவனை தேடி சலித்துப்போன அப்பா, அவனது எல்லா சட்டையிலும் ‘ஆசிரியர் ஜோஷியின் பிள்ளை’ என்று எழுதியிருந்தாராம்.

 இசை கற்க குருவைத் தேடி 11 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜோஷி. முதலில் தார்வாருக்கும், புனேவுக்கும் சென்றவர், பின்னர் குவாலியரைச் சென்ற டைந்தார்.

 அங்கு பிரபல சரோட் இசைக் கலைஞர் ஹபிஸ் அலிகான் உதவியால் மாதவா இசைப் பள்ளியில் சேர்ந்தார். 3 ஆண்டுகள் டெல்லி, கொல்கத்தா, லக்னோ, ராம்பூர் என சுற்றி பல கலைஞர்களிடம் இசை பயின்றார். அவரை ஜலந்தரில் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் அப்பா.

 இவருக்கு இசைப் பயிற்சி அளிக்க 1936-ல் தார்வாடில் இருந்த ஸவாய் கந்தர்வா என்று அழைக்கப்பட்ட பண்டிட் ராம்பன் குந்த்கோல்கர் ஒப்புக்கொண்டார். குரு - சிஷ்ய முறைப்படி குருவின் இல்லத்திலேயே 1940 வரை தங்கியிருந்து இசை பயின்றார்.

 1943-ல் மும்பை சென்று வானொலி நிலையக் கலைஞரானார். இவரது முதல் இசைத் தட்டு 22-வது வயதில் வெளிவந்தது. மராத்தி, இந்தியில் பக்திப் பாடல் களைக் கொண்ட இசைத்தட்டு அது. அப்போது முதல், கிரானா கரானா (Kirana Gharana) என்ற இந்துஸ்தானி இசையில் பிரபலமானார்.

 இவரது பாணி தனித்துவமாக, துல்லியமான இசைக் குறிப்புகளைக் கொண்டதாக இருந்தது. அசாதாரண பயிற்சி மூலம் வசப்படுத்திக்கொண்ட திறன், ஆழமான இசையை இலகுவாக வெளிப்படுத்தும் திறன், இயல்பான ஆற்றலால் நாடு முழுவதும் புகழ்பெற்றார்.

 இசையில் மாயாஜாலம் நிகழ்த்துவார். சுத்த கல்யாணி, மியான் கி தோடி, பூர்யதன, முல்தானி, பீம்பலாசி, தர்பாரி, ராம்கலி ஆகிய ராகங்களில் பாடுவதில் வல்லவர். தனக்கென்று தனி பாணியை வசப்படுத்திக்கொண்டார். தான்சேன், அன்கஹீ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

 கன்னடம், இந்தி, மராத்தி பக்தி இசையில் இவரது பாடல்கள் மிகவும் பிரசித்தம். தனது குரு நினைவாக புனேயில் ஆண்டுதோறும் ஸவாய் கந்தர்வா இசை விழா நடத்திவந்தார்.

 பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் மட்டுமின்றி, நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இந்தியப் பாரம்பரிய இசையின் பிதாமகர் என்று போற்றப்பட்ட பண்டிட் பீம்சேன் ஜோஷி 2011-ம் ஆண்டு 89 வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x