

உலகில் நூற்றுக் கணக்கான பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. எனினும், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ‘கிராண்ட் கேன்யன்’ எனும் மாபெரும் பள்ளத்தாக்கு உலகப் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் இயற்கைப் பிரதேசம் இது. 277 மைல் நீளம், அதிகபட்சமாக 18 மைல் அகலம் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கின் ஆழம் 6,000 அடி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பளிச்சென்ற வண்ணத்தில் நிற்கும் பிரம்மாண்டமான பாறைகள், அவற்றுக்கிடையே வெண்பஞ்சு போல் மிதக்கும் மேகங்கள் என்று பரவசம் தரும் பள்ளத்தாக்கு இது. 1,500-க்கும் மேற்பட்ட வகை தாவரங்கள், மலை சிங்கம், அபூர்வ வகை தவளைகள், கழுகுகள் என்று பல்லுயிர்களின் இருப்பிடமாக இது இருக்கிறது. 1.7 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கொலராடோ ஆற்றின் ஆர்ப்பரிக்கும் நீரோட்டம் இந்தப் பகுதியில் ஏற்படுத்திய அரிப்பின் விளைவாக உருவானது இந்த கிராண்ட் கேன்யன்!
பல நூற்றாண்டுகளாகச் செவ்விந்தியப் பழங்குடிகளின் இருப்பிடமாக இருந்த பிரதேசம் இது. பியூப்லோ இனத்தைச் சேர்ந்தவர்கள், இந்தப் பள்ளத்தாக்கைப் புனித ஸ்தலமாகக் கருதினார்கள். இந்த இடத்துக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்கள். 1540-ல் ஸ்பெயினைச் சேர்ந்த கார்சியா லோபெஸ் டி கார்டெனாஸ் என்ற பயணி இந்தப் பள்ளத்தாக்கைக் கண்டறிந்த பின்னர்தான் இந்தப் பிரதேசம்பற்றி வெளியுலகத்துக்குத் தெரியவந்தது.
300 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த மண்ணியல் ஆய்வாளர் வெஸ்லி பாவல், இந்தப் பகுதிக்குப் பயணம் செய்த பின்னர் ‘கிராண்ட் கேன்யன்’ என்ற பெயரைப் பிரபலப்படுத்தினார். 1903-ல் இந்தப் பகுதிக்கு, அமெரிக்க அதிபர் தியடோர் ரூஸ்வெல்ட் சென்றார். தொழில் வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம்குறித்த பார்வையும் அமெரிக்காவில் உருவாகியிருந்தது. இயற்கை ஆர்வலரான அதிபர் ரூஸ்வெல்ட், கிராண்ட் கேன்யன் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர், தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா சென்று உயிரியல் ஆய்வு மேற்கொண்ட அனுபவம் அவருக்கு உண்டு.
“சக அமெரிக்கர்களே! இயற்கையின் இந்த அதியற்புதத்தை இப்படியே இருக்க விடுங்கள். இதன் கம்பீரத்தை, வசீகரத்தைப் பாழ்படுத்தும் வகையில் எதையும் செய்யாதீர்கள். இந்தப் பிரதேசத்தை நீங்கள் வளப்படுத்த முடியாது. ஆனால், உங்கள் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் மற்றும் உங்களுக்குப் பின்னால் வரப்போகும் அனைவருக்காகவும் இதைப் பாதுகாக்க உங்களால் முடியும்” என்று மக்களுக்குக் கோரிக்கை வைத்தார். ஏனெனில், அந்தப் பகுதியில் கிடைக்கும் தாதுப்பொருட்களை அள்ளிப் பணம்பார்க்க ஏராளமான சுரங்க நிறுவனங்கள் படையெடுத்துக்கொண்டிருந்தன. 1908-ல் இந்தப் பகுதியை தேசியச் சின்னமாக அவர் அறிவித்தார். இந்தப் பகுதியை தேசியப் பூங்காவாக அறிவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு சுரங்க உரிமையாளர்கள் தடங்கல் ஏற்படுத்திக்கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக, 1919 பிப்ரவரி 26-ல் அப்போதைய அதிபர் உட்ரோ வில்ஸன், இந்தப் பகுதியை தேசியப் பூங்காவாக அறிவித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, (1929-ல்) இதே நாளில் வயோமிங் மாகாணத்தில் உள்ள மற்றொரு இயற்கை அற்புதமான கிராண்ட் டெட்டான் எனும் பனிமலைப் பகுதியைத் தேசியச் சின்னமாக அறிவித்தார் அப்போதைய அதிபர் கால்வின் கூலிட்ஜ்! ஒரே தேதியில், பத்தாண்டுகள் இடைவெளியில் இரண்டு இயற்கைப் பகுதிகள் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டது சுவாரஸ்யமான ஒற்றுமை!