Published : 21 Feb 2015 10:09 am

Updated : 21 Feb 2015 10:09 am

 

Published : 21 Feb 2015 10:09 AM
Last Updated : 21 Feb 2015 10:09 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 20- பிச்சையெடுக்கும் கனவு!

20

எங்கள் வாழ்வில் ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறாமலேயே போய்விட்டது. எங்கேயாவது சென்று பிச்சை எடுக்க வேண்டும் என்கிற ஆசைதான் அது!

கவுரவப் பிச்சைகள் சில ஏற்கெனவே எங்களால் எடுக்கப்பட்டிருந்தன.


பூண்டிக்குப் போகிற வழியில் வில்வாரணியைக் கடந்து சாலையின் ஒரு திருப்பத்தில், பனைமரங்கள் வேலிகட்டி நின்றிருந்த வயல்களில் ஏர் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். காலை மணி 8 இருக்கும். எங்களுக்கு பசி ஆரம்பித்திருந்தது.

ஏர் ஓட்டுபவர்களைக் கவனித்த ஜெயகாந்தன், ‘‘இவர்களிடம் கூழ் கேட்டு வாங்கிக் குடிக்கலாமா?’’ என்று கேட்டவாறே, காரின் வேகத்தைக் குறைத்து நிறுத்தினார்.

நாங்கள் கீழிறங்க, உழவர்களில் இருவர் எங்களை நோக்கி வந்தனர்.

அவர்களுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு, ‘‘ஒண்ணுமில்ல… உங்க கிட்ட கூழ் இருந்தா வாங்கிக் குடிக்க லாமேன்னுதான் நின்னோம்…’’ என் றேன் நான்.

‘‘அதோ… அங்கே தலைவரு வூடு இருக்குது. அங்கே கூழ் கெடைக்கும்!’’ என்றார் ஓர் உழவர்.

‘‘தலைவர் வீட்டுக்கெல்லாம் எதுக்கு… உங்ககிட்ட கூழ் இல்லையா?’’ என்றேன்.

‘‘அய்யா… எங்க வூட்டுக் கூழு இன் னும் வரலை. வந்தாலும் அது நீங்க குடிக் கக் கூடாது…’’ என்றார் இன்னொருவர்.

‘‘ஏன்..?’’ என்று ஜெயகாந்தன் இப்போதுதான் வாயைத் திறந்தார்.

பேச்சுவார்த்தை நீள்வதைக் கண்டு, மூன்றாவதாகவும் ஓர் உழவர் அங்கே வந்து சேர்ந்தார். அவர், ‘‘சாமீ… நீங்கள்லாம் எங்ககிட்ட வாங்கிச் சாப்பிடக்கூடாது…’’ என்றார்.

விஷயத்தைப் புரிந்துகொண்ட ஜே.கே, ‘‘அதுக்கென்ன, நாங்க எல்லார் வீட்லயும் சாப்பிடுவோம்!’’ என்று ஒரு குறுநகையோடு கூறினார்.நல்லவேளையாக அப்போது ஒரு பெண்மணி கூழ் இருக்கும் கலயங்கள் உள்ள கூடையை சுமந்தவாறு அங்கே வந்தார்.

அப்புறம் என்ன? பச்சை மிளகாயும் வெங்காயமும் கடித்துக்கொண்டு, நாங் கள் ஆளுக்கு ஒரு குவளை கூழ் குடித்தோம். அவர்களுக்குப் பற்றாக் குறை ஆகிவிடுமென்று நினைத்து, போதும் என்றோம். அவர்கள் நெகிழ்ந் தும் மனம் மகிழ்ந்தும் இன்னும் ஒரு குவளைக் கூழ் குடிக்க வைத்துவிட்டனர்.

நாங்கள் வாய்விட்டுக் கேட்காமலேயே கிடைத்த பிச்சைகளும் உண்டு!

தமிழ்நாட்டில் முதல்முறை யாகக் கள்ளுக்கடைகளும் சாராயக் கடைகளும் திறக்கப் பட்ட நாளுக்கு அடுத்த நாள், ஒரு பெருமழையின் இடையே நாங்கள் திருவஹிந்திபுரத்தில் இருந்து புறப்பட்டு, கடலூரை அடுத்த மடப்பட்டுக் கூட்டு ரோடில் ஒதுங்கி நின்றோம்.

அப்போது நாங்கள் மிகவும் பசியோடிருந்தோம். அன்று ஆயுத பூஜை என்பதால், அந்த நள்ளிரவில் எல்லா கடைகளும் அடைத்துக் கிடந்தன. விலை கொடுத்தும் எதுவும் வாங்க முடியாத நிலை.

பக்கத்தில் ஒரு கதவு திறந்தது. ஒரு பெரியவர் வெளியே வந்து, ‘‘தயிர் சாதம் இருக்கு… சாப்பிடறேளா..?’’ என்று கேட்டார். அந்தத் தயிர் சாதத்தின் சுவை, ஆழ்வார்களால் பாடப்படும் அளவுக்கு இருந்தது!

இந்த மாதிரி இல்லாமல், அசல் பிச்சையே ஒன்று எடுக்க வேண்டும் என்று ஒரு விருப்பம் எங்களுள் பிறந்தது.பிச்சை எடுக்கப் போகிற காட்சியின் திரைக்கதையை ஜெயகாந்தன் விவ ரித்திருந்தார்.

இந்தக் காட்சியில் நாங்கள் அனைவரும் பஞ்சகச்சத்தில் இருக்க வேண்டும். அதுதான் எங்கள் காஸ்ட்யூம். பாம்பாற்றின் நீரற்ற மணல்வெளியில் வைத்து, பஞ்சகச்சம் எப்படி கட்டுவது என்று ஏற்கெனவே எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார் ஜெயகாந்தன்.

அது ராஜா, மந்திரி, ராஜகுரு ஆனவர்கள் எல்லாம் தரிக்கும் உடை. அதனாலேயே அது உயர் வர்க்கத்தினரின் உடையாக மட்டும் ஆகிவிடாது. உழவர் பெருமக்களும் தங்கள் வேட்டியைச் சேர்த்துச் சுருக்கி இரு கால்களுக்குக் கீழே முதுகுப் பக்கம் கொண்டு சென்று செருகுவதும் பஞ்சகச்சத்தின் ஒரு வகைதான்.

அது, பூஷ்வா டைப். இது, புரலடேரியன் டைப்! நடக்கும்போது நடையை எட்டி எட்டிப் போடப் பஞ்சகச்சம் நன்கு உதவும் இன்றைய ‘பேன்ட்’ என்பதின் மூல சூத்திரம் பஞ்சகச்சம்தான் என்றெல்லாம் பஞ்சகச்சத்தின் சிறப்புகளை அவர் எங்களுக்கு சொல்லியிருந்தார்.

இது மாதிரியே, எப்படி பிச்சை யெடுப்பது என்றும் ஜெயகாந்தன் சுவைப்படச் சொல்லியிருந்தார். நமது காரை பிரதான சாலையில் பாதுகாப்பாக நிறுத்திவிடுகிறோம். கொஞ்சம் நடந்தால் அடைகிற ஒரு கிராமமோ, சிற்றூரோ, எதுவோ அதற்குள் நுழைகிறோம்.

கப்பரையைக் கையில் ஏந்தியபடி, கண்ணுக்குப் படுகிற முதல் வீட்டின் முன்னால் போய் நின்று, ‘‘பவதீ… பிச்சாந் தேகி..!’’ என்று உரத்து ஒரு குரல் கொடுக்கிறோம். இந்த வாக்கியம் கலிங்கத்துப் பரணியில் இருந்து எங்களுக்குக் கிடைத்தது. ‘அவதி இல்லாச் சுவைக் கூழ் கண்டு அங்காந்து அங்காந்து அடிக்கடியும், பவதீ பிச்சாந் தேகியெனும் பவணப் பேய்க்கு வாரீரே!’ என்பது கலிங்கத்துப் பரணி.

குரல் கொடுத்துக் கொஞ்ச நேரம் பொறுத்திருந்தும் அன்னம் வராவிட்டால் அப்படியே திரும்புகிறோம். அந்த ஊரில் அடுத்து இன்னொரு வீட்டில் போய்க் குரல் கொடுக்கக்கூடாது.

இதே மாதிரி அடுத்து இன்னும் ஓர் ஊர். பவதீ… பிச்சாந் தேகியென இன்னும் ஒரு பிச்சை!

‘‘எங்கே நமக்கு அன்னம் இடப்படு கிறதோ, அதை நாம் உண்டு பார்ப் போமே..?’’

‘‘எங்குமே எதுவுமே கிடைக்கா விட்டால்..?’’

‘‘வீடுதோறிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைப் போல் இருப்போமே’ என்று வள்ளலார் பாடியதைப் போல வெறும் வயித்தோட இருக்க வேண்டியதுதான்!’’ என்றார் ஜே.கே.

எங்களுக்கு இந்தத் திட்டம் மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது.

பிச்சையெடுக்க எங்களுக்கு ஒரு கப்பரை தேவைப்பட்டது. திருவோடு என்று அது மேன்மையாகச் சித்தரிக்கப் படும்.

யாழ்ப்பாணம் தேங்காயை நெடுகப் பிளந்த கொட்டாங்கச்சியே கப்பரை எனப் பட்டது. நம் ஊர்த் தேங்காய்கள் கப்ப ரைக்கு உதவாது. கப்பரையைக் கவிழ்த் துப் போட்டு மேலே ஒரு துணியை மடித்துப் போட்டுவிட்டால் அது ஒரு சுகமான தலையணை ஆகிவிடும்.

எனவே நாங்கள் ஒரு கப்பரையைத் தேட ஆரம்பித்தோம்.

சில சாமியார்களிடம் அத்தகைய கப்பரை இருந்தது. ஆனால், அவர்களின் வாழ்வாதாரமான அதனை விட்டுக்கொடுக்க முன்வராததால், நாங் கள் கப்பரையை அரும்பொருள் என்கிற வகையினுள் சேர்த்துவிட்டோம்.

கலிங்கத்துப் பரணியில் இருந்து உருவி எடுத்த ஒரு வரியை, காற்று வெளி யில் எங்கோ கலந்துவிட இருந்தோம். கப்பரை கிடைக்காத காரணத்தை வைத்து, எங்கள் பிச்சையெடுக்கும் கனவு நிறைவேறாமலேயே போயிற்று!

- வாழ்வோம்…

எண்ணங்களைத் தெரிவிக்க: pisakuppusamy1943@gmail.com


தொடர்ஜெயகாந்தனோடு பல்லாண்டுபி.ச.குப்புசாமிசனிக்கிழமை சரிதை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x