Last Updated : 08 Feb, 2015 12:35 PM

 

Published : 08 Feb 2015 12:35 PM
Last Updated : 08 Feb 2015 12:35 PM

முகச்சவரம்: ரூ. 2, சிகையலங்காரம்: ரூ. 5

தலைக்கு மேல் வேலை என்றதும் முடிதிருத்தும் நிலையங்களைத் தேடிச் செல்கிறோம். எப்படியும் தெருவுக்கு ஒன்றாவது இருக்கிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்னால் சிகை அலங்கார நிலையங்கள் என்பது பெருநகரங்களில் மட்டுமே இருந்தது. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இருந்த மனிதர்களின் வாழ்க்கை முடிதிருத்துபவர்களைச் சார்ந்ததாகவே அமைந்திருந்தது.

முடிவெட்டுவது, முகச்சவரம் செய்வதோடு மட்டும் அவர்களின் வேலை முடிந்துவிடவில்லை. அந்தக் கிராமத்தின் நல்லது கெட்டது அனைத்திலும் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. எதுவாக இருந்தாலும் முதல் தகவலை வெற்றிலை பாக்கும் ஒன்றேகால் ரூபாய் பணமும் வைத்து முடிதிருத்துபவரின் வீட்டுக்குப் போய்ச் சொல்வார்கள். அவரே அந்தக் குடும்பத்தின் காரியங்களை முன்னின்று நடத்தித்தரும் காரியதரிசி. தவிர, கிராம வைத்தியர்களும் அவர்கள்தான். பலவகை மூலிகைப் பொடிகளை வைத்திருக்கும் இவர்கள், நோயின் தன்மைக்கேற்பத் தேவையான பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிடத் தருவார்கள். பெரும்பாலான நோய்கள் இவர்களுக்குக் கட்டுப்படும். இவர்கள் வீட்டுப் பெண்கள்தான் பிரசவம் பார்ப்பார்கள். பிறந்த குழுந்தையைப் பக்குவமாகக் குளிப்பாட்டித் தருவார்கள். வாழ்வின் அத்தனை முக்கிய நிகழ்வுகளிலும் முடிதிருத்துபவரின் துணை தேவைப்பட்ட நாட்கள் அவை.

நண்டின் கால்கள்

ஒரு கத்தி, ஒரு கத்தரிக்கோல், நண்டின் கால்கள் போன்று பல பற்கள் உடைய கையகல மெஷின் ஒன்று, ஒரு கிண்ணம், ஒரு ரசம் போன கண்ணாடி, ஒரு கட்டி படிகாரக் கல். இவைதான் முடிதிருத்துபவரின் கைப்பொருட்கள். நான் ரொம்பவும் சிறுவனாக இருந்தபோது 70 வயதான பாவாடைராயனிடம் என்னையும் அண்ணன் செல்வத்தையும் அழைத்துக்கொண்டு போய் உட்காரவைத்தார் பாண்டியண்ணன். அவரின் தோற்றத்தையும் கைப்பொருட்களையும் பார்த்த எனக்கு வயிற்றைக் கலக்கியது. ஆனாலும் அடக்கிக்கொண்டேன். தலையைக் குனியவைத்து முதலில் தண்ணீரைத் தெளித்தார். பிறகு, அந்த நண்டு கால்கள் அமைப்பிலான மெஷினை எடுத்து ‘கரக் கரக்’ என்ற ஒலியோடு முடியை வெட்ட ஆரம்பித்தார். அது முடியை வெட்டுவதற்குப் பதில் பிடுங்க ஆரம்பிக்க, நானோ வலியிலும் பயத்திலும் ஓவென்று கத்த ஆரம்பித்தேன். ஆனால், பெரியவரோ இன்னும் குனிய வைத்துத் தன்பாட்டுக்கு வேலையைப் பார்த்தார். பயம் அதிகமாகி, அவர் பிடியிலிருந்து முண்டி எழுந்து, அங்கிருந்து கத்திக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். ஆனால், செல்வம் வேகமாக ஓடிவந்து என்னைப் பிடித்து உட்கார வைத்துவிட்டார். இந்த முறை என்னை இரண்டு பக்கமும் இருவரும் பிடித்துக்கொள்ள, பாவாடைராயன் ஒருவழியாகத் தலைமுடியை வெட்டி முடித்தார்.

அதிலிருந்து முடி வெட்டப் போக வேண்டும் என்றாலே நான் அலற ஆரம்பித்துவிடுவேன். ஒன்றிரண்டு முறைக்குப் பிறகு, நான் செய்த அலப்பறையைப் பார்த்துவிட்டு கோவிந்தராசுவிடம் அழைத்துப் போனார்கள். அவர் மெஷின் போட்டு வெட்டாமல் கத்தரிக்கோல் வைத்து வெட்டிவிட்டார். பிறகு, இளம் தலைமுறையினர் அனைவரும் கத்தரிக்கோல் பிடிக்க ஆரம்பித்ததும்தான் என் பயம் நீங்கி சகஜமாக முடிவெட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனாலும், சவரக்கத்தி காதை லேசாகக் காயப்படுத்துவது மட்டும் இன்று வரை நிற்கவில்லை. நான் தலையை ஆட்டிவிடுகிறேன் என்று முடிதிருத்துபவர்கள் எல்லோரும் ஒன்றுபோலச் சொன்னார்கள்.

எங்கள் பகுதியில் அப்போது முடிவெட்டிக்கொள்ளக் கூலியாகப் பணம் கொடுப்பது வழக்கமில்லை. எங்கள் வீட்டில் மூவர் முடிவெட்டிக்கொள்ள வருடம் ஒன்றுக்கு ஒரு கலம் நெல் (12 மரக்கால்) கூலியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நெல் அறுவடையின்போது களத்துக்கே வந்து அந்த நெல்லை வாங்கிச் செல்வார்கள். 1988-ல் எங்களூரில் முதன்முதலாக சலூன் கடை திறந்தார் ராதாதம்பி என்கிற தியாகராஜன். அதுவரை ஆச்சாள்புரம், அல்லது கோதண்டபுரம் போனால்தான் சலூன் கடையைப் பார்க்க முடியும். எங்களூரில் கடை வந்தபின் மெல்ல மெல்லக் காணாமல் போனது நெல் கூலி முறை. பிள்ளையார் கோயில் அருகில் இரண்டு பக்கமும் கண்னாடி வைத்து ஒரு சாய்மான நாற்காலி போட்டுத் திறக்கப்பட்ட அந்தக் கடையில் காத்திருந்து முடி வெட்டிப் போனார்கள் எங்கள் மக்கள்.

ஊரில் ஏற்பட்ட புரட்சி!

அந்தக் கடை எங்கள் ஊரில் பெரிய புரட்சியையும் உண்டாக்கியிருந்தது. அதுவரை தலித் மக்களுக்கென்று முடிதிருத்துபவர் தனியாக இருந்த நிலை மாறி, இங்கு அனைவரும் ஒன்றாக வந்து சிகை திருத்திக்கொண்டு போனார்கள். இரண்டு ரூபாயில் முகச்சவரம், ஐந்து ரூபாயில் சிகை அலங்காரம். அதிலும் ‘ஸ்டெப் கட்டிங்’ வெட்டச் சொல்லிக் கெஞ்சுவார்கள் என் வயதுப் பையன்கள். அந்தக் கடைக்குப் பிறகு மரத்தடி என்பது முற்றிலுமாக மறைந்துபோய், முடிதிருத்துபவர் குடும்பத்து நபர்கள் அனைவருமே கடைகள் வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் குடும்பங்களுக்கும் எங்கள் குடும்பங்களுக்குமான பிணைப்பின் உறவுச் சங்கிலிகள் மட்டும் அறுந்துவிட்டன.

தொடர்புக்கு: muthu.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x