

திரைப்படக் கலைஞர்கள் திரையுலகத்துக்குள்ளேயே எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். கோடிக் கணக்கில் செலவு செய்து படம் தயாரித்த பின்னர், விநியோகம் உள்ளிட்ட விஷயங்களில் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிவரும். படம் வெளியான பின்னர் கிடைக்கும் வெற்றி - தோல்விகள், லாப - நஷ்டங்கள் தனி. திரைப்பட வரலாற்றின் தொடக்கக் காலத்திலிருந்தே இந்த நிலைதான். குறிப்பாக, 1910-களில் ஹாலிவுட் கலைஞர்கள் விழிபிதுங்கும் அளவுக்குப் பிரச்சினைகளைச் சந்தித் தார்கள். திறமைவாய்ந்த கலை ஞர்கள், தயாரிப்பாளர்களின் கட்டுப்பாடுகளுக்குப் பணிய வேண்டியிருந்தது. தங்கள் படைப்புச் சுதந்திரம் தடைபடு வதாகவே கலைஞர்கள் கருதினர்.
டி.டபிள்யூ. கிரிஃப்த் என்னும் புகழ்பெற்ற இயக்குநர், 1915-ல் தயாரித்து இயக்கிய ‘தி பர்த் ஆஃப் எ நேஷன்’ படத்தின் தயாரிப்புச் செலவு, அன்றைய காலகட்டத்திலேயே 1 லட்சம் டாலர்களை எட்டியது. அவ்வளவும் அவரது சொந்தப் பணம் (தனது அப்பாவிடமும் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார் கிரிஃப்த்). 3 மணி நேரம் ஓடும் படம் அது. போட்ட பணம் கைக்கு வருமா என்ற கவலை அவரை வாட்டியது. நல்லவேளை யாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வசூலில் சாதனை படைத்தாலும், அதில் குறிப்பிட்ட அளவு பணம்தான் அவருக்குக் கிடைத்தது. விநியோகஸ்தர்கள் பலர் விளையாடிவிட்டார்கள். இதே போன்ற பிரச்சினைகளைச் சந்தித்த திரைப்பட மேதை சார்லி சாப்ளின், நடிகை மேரி பிக்ஃபோர்டு, நடிகரும் இயக்குநருமான டக்ளஸ் ஃபேர்பேங்ஸ் ஆகியோர் இவற்றுக்குத் தீர்வுகாண முடிவெடுத்தனர்.
நால்வரும் இணைந்து, 1919-ல் இதே நாளில், ‘யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். தங்கள் படங்களைத் தாங்களே விநியோகம் செய்தார்கள். முன்னணித் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இந்த முயற்சியைக் கேலிப் புன்னகையுடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ஹிஸ் மெஜஸ்டி, தி அமெரிக்கன்’ திரைப்படம் வெற்றியடைந்து நால் வருக்கும் நிம்மதி தந்தது. தொடர்ந்து பல வெற்றிப் படைப்புகளை ‘யுனை டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ கண்டது. எனினும், 1923-ல் ‘ஏ வுமன் ஆஃப் பாரிஸ்’ படத்துக்குப் பின்னர்தான் இந்நிறுவனத்தின் கீழ் படங்களை இயக்கினார் சார்லி சாப்ளின்.
நன்றாகப் போய்க்கொண்டிருந்த நிறுவனம், 1950-களில் சற்றுத் தடுமாறியது. அதன் பின்னர், தயாரிப்பை நிறுத்திவிட்டு ஃபைனான்ஸ், விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கியது. காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களைச் சந்தித்த நிறுவனம் இது. நடிகர் டாம் க்ரூஸ் 2007-ல் தனது க்ரூஸ்/வாக்னர் நிறுவனத்துடன் ‘யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனத்தை இணைத்துப் படங்களைத் தயாரித்துவருகிறார். தங்கள் படைப்புச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முனைந்த நான்கு கலைஞர்களின் கனவு இன்றும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.