Published : 10 Jan 2015 12:24 PM
Last Updated : 10 Jan 2015 12:24 PM

கே.ஜே. யேசுதாஸ் 10

கர்னாடக இசைக் கலைஞரும், புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகருமான கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸின் (கே.ஜே. யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று (ஜனவரி10). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர். ஐந்து வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை தந்தையிடம் கற்றார். திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார். சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் இசை பயின்றார்.

 முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். 1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.

 மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன், ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்து, 17 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.

 இசைப் பேரறிஞர் விருது, பத்ம விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 1965-ல் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரஷ்ய அரசு இவரை அழைத்திருந்தது.

 இன்டர்நேஷனல் பார்லிமன்ட் ஃபார் சேஃப்டி அன்ட் பீஸ் அமைப்பின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971-ல், இந்திய-பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றபோது, கேரளா முழுவதும் தன் இசைக் கச்சேரிகள் நடத்தி பிரதம மந்திரி யுத்த நிதிக்காக பணம் திரட்டினார்.

 கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா, சங்கீத ரத்னா, கான கந்தர்வா ஆகிய எண்ணற்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தி யுள்ளார். பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.

 ஒரு பாடகனாக நான் வலம் வருவதற்கு என் அப்பாதான் காரணம் என்று கூறும் இவர், எனது குருமார்கள், செம்பை வைத்தியநாத பாகவர், குமாரசாமி அய்யரையும் என்னால் மறக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 1964-ல் தொடங்கிய இவரது இனிய இசைப் பயணம் அரை நூற்றாண்டைக் கடந்துள்ளது. 1980-ல் திருவனந்தபுரத்தில் தரங்கிணி ஸ்டூடியோ மற்றும் தரங்கிணி ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவங்களை தொடங்கி நடத்திவருகிறார்.

 இவர் பாடியுள்ள ஐயப்பன் பாடல்கள் மிகவும் பிரசித்தம். 2006-ல் சென்னை ஏ.வி.எம். அரங்கில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x