Last Updated : 13 Jan, 2015 10:00 AM

 

Published : 13 Jan 2015 10:00 AM
Last Updated : 13 Jan 2015 10:00 AM

தமிழகத்தின் கம்பீரக் குரலுக்கான தேடல்

‘தமுளகத்தின் ச்சொல்லக் குரலுக்கான தேடல்’ என்று மூக்கடைத்த குரலில் தொகுப்பாளினிகள் தரும் தொல்லை களால், தார்மீகக் கொந்தளிப்படையும் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாம் சீமான், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைக் கைப்பற்றுவது தொடர்பாகத் தன்னைவிடப் பல மடங்கு அதிக வயதுள்ள ‘தம்பிக’ளுடன் அமர்ந்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்.

“தம்பி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பாட்டு, சிங்களவர் பஸ்ஸை நிப்பாட்டு, இசை, வசை போன்ற ஆயகலைகள் ஆறு லட்சத்தி ஐநூறும் தமிழனின் வாய்க்குள் தங்கியிருக்கின்றன. ஆனால், என்னவோ புதிதாகக் கண்டுபிடிப்பது போல், எமது ரத்த உறவுகளின் குரல்களைச் சோதிக்கும் நிகழ்ச்சியை வட நாட்டு நிறுவனத்தின் துணையுடன் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுத்தாக வேண்டும். இதற்கு ஒரு வழி சொல்லுங்களடா…” என்று கடும் தோரணை முகத்துடன் கர்ஜிக்கிறார் சீமான்.

ஸ்டீவன் சோடென்பெர்க் இயக்கிய ‘சே’ படத்தில், சே குவேராவாக நடித்த பெனிசியோ டெல் டோரோவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள் அணிந்த தம்பிகள் பல யோசனைகளை முன்வைக்கிறார்கள்.

“அண்ணா, முட்டிக்காலுக்கும் கீழே தரையைக் கூட்டும்படி சுடிதார் அணிந்து வரும் அந்த வெண்தாடி வேந்தனைத் தூக்குவோம். பாட்டுப் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளை பயமுறுத்திக் கொண்டிருக்கும் அவரைத் தூக்கினால் சூப்பர் சிங்கர் என்ன சுப்ரீம் சிங்கரையே நம்மால் நடத்திக்காட்ட முடியும்” என்கிறார் இருப்பதிலேயே வயதான தம்பி ஒருவர்.

இந்த யோசனையால் கவரப்பட்டு, முகத்தைச் சுளித்தபடியே புன்னகையுடன் யோசித்துக் கொண்டிருக்கிறார் சீமான். திடீரென்று “ஆமாம், ஆமாம். இது மிகச் சிறந்த வழிதான். இதுதான் தொலைக்காட்சி முன் தூங்கிவழியும் நம் தமிழினத்தைத் தட்டியெழுப்ப நமக்கு இருக்கும் ஒரே நல்வழி. இன்றே தூக்குவோம் அந்த இசை இம்சையை” என்று வலது கையை உயர்த்தி வானத்தைக் குத்துகிறார்.

காட்சி 2:

புது மாடல் குர்த்தாக்கள் வந்திருப்பதாகப் பிரபல மகளிர் ஆடையகத்திலிருந்து வந்த அலைபேசி அழைப்பை நம்பி ஆனந்த் வைத்யநாதன், விஜய் டிவி செட்டை விட்டு வெளியே வருகிறார். அந்த நேரம் பார்த்து அவரை ‘சூது கவ்வும்’ பாணியில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறக்கிறது தம்பிகள் குழு.

காட்சி 3:

சூப்பர் சிங்கர் ஜூனியரில் பாட்டு பாடுவதற்காக அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அப்பப்பா, அம்மம்மா, அவங்கம்மா, பக்கத்து வீட்டு ஆண்ட்டி, அவங்க ஆயா என்று சிறு கிராமத்துடன் வந்திருக்கும் இருபது

இருபத்தைந்து வயதுக் குழந்தைகள் தண்டால், குஸ்தி பயிற்சிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். ஒரு குழந்தை குதிரையேற்றம் பழகிக்கொண்டிருக் கிறது. ஒரு சிறுமிக்கு ‘ஜிகர்தண்டா’ நடிப்பு வாத்தியார் அழுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக சாத்வீக முறையில் நடந்துகொண்டிருக்கும் சாதகப் பயிற்சியில் திடீரென்று ஏற்படுகிறது ஒரு இடையூறு.

கருப்பு குர்த்தா, கருப்பு பைஜாமா, கருப்பு துப்பட்டாவுடன் களமிறங்கிக் கலவரப்படுத்து கிறார் சீமான். அதிர்ச்சியுறும் கானக்குட்டிக் குயில்கள் அங்குமிங்கும் ஓடி அலறுகின்றன. குழந்தைகளை அமைதிப்படுத்தி நிகழ்ச்சிக்கு தயார்படுத்துகிறார்கள் தம்பிகள்.

காட்சி 4:

அட்டகாசமாகத் தொடங்குகிறது நிகழ்ச்சி. நடுநாயகமாக நின்றுகொண்டிருக்கும் சீமான் கையில் மைக்கை எடுத்துக்கொண்டு, சம்பிரதா யப்படி கண்டம் விட்டுக் கண்டம் இருக்கும் யாருக்கோ கடுமையான கண்டனங்களைத் தெரி வித்துவிட்டு அவைக்கு முதற்கண் வணக்கம் வைக்கிறார்.

“தமிழர்களெ (குறில்தான்!), தமிழ்ச் சொந்தங்களெ, தொப்புள் கொடி உறவுகளெ, இன்று முதல் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் பெயரை, உச்ச பச்ச பாடகர் என்று மாற்றுகிறேன். தமிழனாகப் பிறந்த ஒரு பயலும் எதிர்க்கக் கூடாது.

இன்று முதல் நானே விருந்தாளி நானே நீதிமான். முக்கியமான நிபந்தனை இதுதான் தமிழர்களெ... இன்று முதல் செல்லம் புஜ்ஜிக் குரல் தேடல் எல்லாம் கிடையாது. கம்பீரமான கடும் குரல் கொண்டவர்களுக்குத் தான் வாய்ப்பு, பரிசு எல்லாம்” என்று ஆரவாரமாக அறிவிக்கிறார்.

வந்திருந்த நடுவர்கள் ஓரமாக உட்கார வைக்கப்படுகிறார்கள். புதிய பாடகி புனித் இசார் முழுக்க பர்தா அணிந்து மற்ற நடுவர்களுடன் அமர்ந்திருக்கிறார். பாடும்போதும் பாட்டைக் கேட்கும்போதும் முகத்தில் நவ பாவங்களையும் காட்டும் ஸ்ரீனிவாஸ், பரிதாப பாவமாக அமர்ந்திருக்கிறார்.

தம்பிகள், தம்பிகளின் வாரிசுகள், பேரக் குழந்தைகள் என்று பலர் கலந்துகொண்டு பாடாத பாடு பாடுகிறார்கள். வினுச்சக்கரவர்த்தி, விடிவி கணேஷ் போன்ற காந்தர்வக் குரல் கொண்ட பெண்கள் பாடுவதைத் தலையாட்டியபடி ரசித்துக்கொண்டிருக்கிறார் சீமான்.

காட்சி 5:

திடீரென எதிர்பாராத திருப்பம்! நடுவர் களில் ஒருவரான புதுப் பாடகி புனித் இசார் தான் அணிந்திருந்த பர்தாவை விலக்கி முகத்தைக் காட்டுகிறார். பார்த்தால் அது விஜய டி.ராஜேந்தர்!

“சார், நீங்க எல்லாம் நல்லா தமிழ் தெரிஞ்சவங்க. நல்லா இசை படிச்சவங்க. நா ஒரு பாமரன் சார். எனக்கு ஒண்ணுமே தெரியாது” என்று மெள்ளத் தொடங்குகிறார்.

பதவிசான தொடக்கத்துக்கு அப்புறம் முழு சந்திரமுகியா கிறார் ராஜேந்தர். “யேய்... இதாண்டா ஒரிசா ஒரிஜினல் கானா பாட்டு, ஏய்.. ஆயியே ஜீ ஜீ போயியே… இதர் உதர் பாயியே.. அகர் மகர் காயியே” என்று அவர் விடும் சவுண்டில் சீமானே செட்டை விட்டுத் தெறித்து ஓடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x