

உற்சாகமூட்டும் உரைகள், பயிலரங்குகள் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான வெற்றியாளர்களை உருவாக்கிவரும் விற்பனைத் துறை சாதனையாளர் பிரையன் டிரேசி பிறந்தநாள் இன்று (ஜனவரி 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
கனடாவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நிலைக் கல்வியை பாதியில் விட்டுவிட்டு, உடலை வறுத்தும் கடுமையான வேலைகளைச் செய்தார். 20 வயது ஆனபோது, நார்வே சரக்குக் கப்பலில் வேலை கிடைத்தது. உலகம் முழுவதும் சுற்றவேண்டும் என்ற நீண்ட நாள் கனவும் நிறைவேறியது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பிறகு தென்ஆப்பிரிக்காவில் 2 ஆண்டுகள் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்த்தார். ‘ஒரு சிலரை மட்டும் எது வெற்றியாளராக மாற்றுகிறது?’ என்ற சிந்தனை இவருக்குள் அடிக்கடி சுழன்றது. விற்பனை உத்திகள் மற்றும் வெற்றிக்கு வழிகாட்டும் புத்தகங்களைத் தேடிப் படித்தார்.
அதில் கூறப்பட்ட கருத்துகளை எழுதி வைத்துக்கொள்வார். அவற்றைத் திரும்பத் திரும்பப் படிப்பார். அதோடு, செயல்படுத்தவும் செய்தார். மெல்ல, மெல்ல இவரது விற்பனைத் திறன் மேம்பட்டது. ஆறே மாதங்களில் இவர் வேலை பார்த்த நிறுவனத்தின் மிகச் சிறந்த விற்பனை யாளராக உயர்ந்தார். பல்வேறு நாடுகளுக்குச் சென்றார்.
8 ஆண்டு சாகச சுற்றுப்பயணம் இவரது வாழ்க்கையை மாற்றியது. ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் இறக்குமதி, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம், பயிற்சி மற்றும் ஆலோசனை என அனைத்து துறைகளிலும் களம் இறங்கினார். தான் ஈடுபட்ட அனைத்திலும் தலைசிறந்தவராக பிரகாசித்தார்.
பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவிலும், இரவு நேரப் பள்ளி யில் சேர்ந்து, பாதியில் விட்ட படிப்பைத் தொடர்ந்தார்.
30-வது வயதில் அல்பெர்டா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பிரையன் டிரேசி இன்டர்நேஷ னல் நிறுவனம் பிறந்தது. தனி நபர்களுக்கும் நிறுவனங் களுக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இதுவரை அமெரிக்கா, கனடா உட்பட 58 நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
50 லட்சம் பேரிடம் கலந்துரையாடல் நிகழ்த்தியுள்ளார். 5 ஆயிரம் பயிலரங்குகள் நடத்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாடி வருகிறார்.
விற்பனையில் சாதனை படைத்த 52 புத்தகங்களின் ஆசிரியர் இவர். 27 மொழிகளில் வெளிவந்து உலகம் முழுவதும் மிக அதிகமாக விற்பனையாகும் ‘சைக்காலஜி ஆஃப் அச்சீவ்மென்ட்’ புத்தகம் உள்ளிட்ட பல புத்தகங்கள் 38 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
500 ஆடியோ, வீடியோ கற்றல் திட்டங்களை தயாரித்துள்ளார். தலைமைத் தகுதி, விற்பனை, இலக்குகள், வியூகங்கள், ஆக்கத் திறன், வெற்றி உளவியல் ஆகியவை குறித்த இவரது உற்சாகமூட்டும் பேச்சுகளும் மனிதவள மேம்பாட்டுப் பயிலரங்குகளும் பலரை வெற்றியாளர்களாக மாற்றியுள்ளன.
பிரையன் டிரேசி 70 வயதை நிறைவு செய்த நிலையிலும், உலகம் முழுவதும் வெற்றியாளர்களை உருவாக்கி வருகிறார்.