

15 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக வருத்தம் தெரிவித்தார் காந்தி. ஜமான் சாஹேப் மற்றும் யூசுஃப் சாஹேப்பைச் சந்திக்க வேண்டியிருந்ததால் ஏற்பட்ட தாமதம் அது. தாங்கள் உருவாக்கிய தங்குமிடத்தின் மாதிரியை காந்தியிடம் காட்ட அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர். அது நல்ல வீடாகத் தெரிந்தாலும், இந்தியாவின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தவரை அது மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று காந்தி கருதினார்.
ஒரு பெட்டியுடன் ஒப்பிடக்கூடிய வகையில் இருந்த அந்த வசிப்பிடத்தில் அகதிகள் தங்க நேர்ந்தால், அடுப்பில் வெந்துவிடுவது போன்ற நிலை ஏற்படலாம். கதவு, ஜன்னல்களை மூடி வைப்பது அவர்களின் வழக்கம் என்பதால், இந்த வசிப்பிடத்தில் மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்று காந்தி கருதினார். இதற்குப் பதிலாக மூங்கில், வைக்கோல் கூரையை வைத்து வசதியான வசிப்பிடத்தை உருவாக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். இந்த வசிப்பிடங்கள் காற்றோட்டத்துடனும் குளுமையாகவும், தென்னை, பாக்கு மரங்களுக்கு மத்தியில் இந்தியக் கலைத்தன்மையுடனும் இருக்கும்.
அகதிகள், புகலிடம் தேடிச் சென்ற இடங்களிலிருந்து திரும்பி வரத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு காந்தி மகிழ்ச்சியடைந்தார். இனி, திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் தங்கள் மனதிலிருந்து பயத்தை அகற்ற வேண்டும் என்றும், இந்துக்களோ முஸ்லிம்களோ தங்கள் சொந்த மக்களின் மத்தியில் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வை அவர்கள் உணர வேண்டும் என்றும் காந்தி கருதினார்.
தங்களைப் படைத்த கடவுளுக்கு மட்டுமே பயப்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டாலே சக மனிதர்களுக்குப் பயப்படுவதை அவர்களால் நிறுத்த முடியும். தங்களைக் கண்டு தாங்களே அச்சப்படுவதை நிறுத்தினால், பிறகு எந்த விஷயமும் தங்களை அச்சுறுத்தாது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். கடந்த 60 ஆண்டுகளில் காந்தி பெற்ற பெரும் அனுபவம் இது.
- நவகாளி மாவட்டத்தின் ஆம்கி பகுதியில், 1947 ஜனவரி 30-ல் காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சிகுறித்து ‘ஹரிஜன்’ இதழில் 23.02.1947-ல் வெளியான பத்தி.
- தமிழில்: வெ. சந்திரமோகன்