

ஐசோடோப் ஹீலியம் 3 ன் சூப்பர்ஃப்ளுயிடிட்டி குறித்து கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞரான டேவிட் மோரீஸ் லீ பிறந்த தினம் இன்று (ஜனவரி 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
நியூயார்க் நகருக்கு வெளியே சிறு புறநகர்ப் பகுதியான ராய் என்ற ஊரில் பிறந்தவர். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். தந்தை மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். குழந்தை யாக இருந்தபோது வயல்களிலும் கடற்கரைப் பகுதிகளில் காணப் படும் உயிரினங்களை மணிக்கணக் காகப் பார்த்துக் கொண்டிருப்பார்.
சிறு வயதில் ரயில்கள் மேல் அலாதி பிரியம் கொண் டிருந்தார். ஒட்டுமொத்த அமெரிக்க ரயில்வே அட்ட வணையையும் சேகரித்து ஒரு இளம் ரயில் பிரயாண நிபுணராகவே மாறிவிட்டார். வானியல் ஆராய்ச்சிகளிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். சொந்தமாக வானிலை அறிக்கை பதிவேட்டைப் பராமரித்து வந்தார்.
சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் எழுதிய தி மிஸ்டீரியஸ் யுனிவர்ஸ் என்ற புத்தகத்தைப் படித்தார். அதுதான் இயற்பியலில் இவருக்குள் இருந்த ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. 1952ல் அமெரிக்க ராணுவத்தில் 22 மாதங்கள் பணிபுரிந்தார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இயற்பியல் ஆய்வுகளில் இறங்கினார். ஒரு பேராசிரியருடன் இணைந்து, காக்கிராஃப்ட்-வால்டன் ஆக்சிலரேட்டருக்கான அயனியாக்கப் பாதை கட்டுப்பாடு சர்க்யூட் அமைப்பதுதான் இவரது முதல் ஆய்வு.
கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சார்லஸ் ரெனால்ட்சுடன் சூப்பர்ஃப்ளுயிட் திரவ ஹீலியம் குறித்து சோதனை ஆய்வு நடத்தி வந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
திரவ ஹீலியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். தன் சகா ரிச்சர்ட்சன்னுடன் இணைந்து, குறைந்த வெப்பநிலை கொண்ட சோதனைக் கூடத்தில் தங்களது ஆய்வுகளுக்காக குளிர்விக்கும் ஒரு விசேஷ சாதனத்தை வடிவமைத்தார்.
எதேச்சையாக 1972ல் ஹீலியம்-3ல் சூப்பர்ஃப்ளூயிடிட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த ஹீலியத்தில் இருக்கும் அணுக்கள் ஒருங்கிணைந்த முறையில் நகர்வ தால், எந்த உட்புறத் தடையும் இல்லாமல் சரளமாக பாய்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இந்த நிலையில் இருக்கும் ஹீலியம் -3 குவான்டம் இயக்கமுறை விதிகளின் படி செயல்படுகிறது என்பதை இந்தக் குழு கண்டறிந்தது.
இந்த ஆய்வுக்காக ராபர்ட் சி. ரிச்சட்சன் மற்றும் டாக் ஓஷரோஃப் ஆகியோருடன் கூட்டாக இணைந்து 1996ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
இவரது ஆய்வுகள் திரவங்கள், திடப்பொருட்கள் மற்றும் சூப்பர்ஃபுளூயிட் ஹீலியம், (4He, 3He மற்றும் இரண்டும் கலந்த) தொடர்பான எண்ணற்ற விஷயங்களை உள்ளடக்கியவை.
நோபல் பரிசு தவிர அமெரிக்கன் ஃபிசிகல் சொசைட்டியின் ஆலிவர் பக்லே விருது உள்ளிட்ட பரிசுகளையும் விருது களையும் வென்றுள்ளார். உலகின் பல்வேறு அறிவியல் அமைப்புகளிலும் இவர் உறுப்பினராக செயல்படுகிறார். தற்போது 78வது வயதிலும் டெக்ஸாஸ் ஏ.எம். பல்கலைக் கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருவதோடு தனது முன்னாள் ஆய்வுக்குழுவினரோடு இணைந்து ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.