

அமெரிக்கப் பேச்சாளர், எழுத்தாளர், தத்துவவாதி, உளவியல் அறிஞர் கென் வில்பர் (Ken Wilber) பிறந்தநாள் இன்று (ஜனவரி 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அமெரிக்காவின் ஒக்லஹா மாவில் பிறந்தவர். அப்பா விமானப் படையில் பணிபுரிந்த தால் சிறுவயதில் பல இடங்களுக்கு மாறவேண்டி இருந்தது. பள்ளிக் கல்வியை முடித்ததும், மருத்துவம் படிக்க டியூக் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். முதல் ஆண்டிலேயே அதில் ஆர்வம் குறைந்ததால், உயிரி வேதி யியல் பயின்றார். முனைவர் பட்ட ஆய்வில் இருந்து பாதியில் விலகினார்.
‘படிப்பு போதும்..’ என்ற முடிவுக்கு வந்தவர், ஓர் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அங்கு வேலை செய்தார். வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கை புத்தகங்கள் வாங்க செலவிட்டார்.
பல்வேறு துறைப் புத்தகங்களை படித்தார். ஷாம்பாலா பதிப்பகம் வெளியிட்ட கிழக்கத்திய இறைவாதம், தத்துவம், உளவியல் நூல்களை நூற்றுக்கணக்கில் படித்தார். தாவோ-தே-சிங் உள்ளிட்ட கிழக்கத்திய தத்து வங்கள் இவரை மிகவும் ஈர்த்தன. பவுத்த முறை தியானத்திலும் ஈடுபட்டார்.
எழுதவும் ஆரம்பித்தார். உணவகத்தில் வேலை செய்த போது அடுத்தடுத்து 6 புத்தகங்கள் எழுதினார். ஆன்மிகம், அறிவியலில் 22 புத்தகங்கள் எழுதியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரது புத்தகங்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
பிரக்ஞை குறித்த இவரது ஆய்வுப் புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘பிரக்ஞை குறித்த ஆராய்ச்சிகளின் ஐன்ஸ்டீன்’ என்று அழைக்கப் படுகிறார். தனது ‘தி ஸ்பெக்ட்ரம் ஆஃப் கான்ஷியஸ்னஸ்’ புத்தகம் மூலம் கிழக்கு - மேற்கத்திய தத்துவத்தை ஒன்றிணைக்க விரும்பும் சிந்தனையாளராக புகழ்பெற்றார்.
‘நோ பவுண்டரி’, ‘தி ஆத்மன் புராஜெக்ட்’, ‘அப் ஃபிரம் ஈடன்’, ‘தி ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் எவ்ரிதிங்’ ஆகிய இவரது புத்தகங்கள் அடுத்தடுத்து வெளியாகி புகழ் பெற்றன. இவை 8 தொகுதிகளாக தொகுத்து வெளியிடப் பட்டன. பிராய்டு, கெப்ஸர், புத்தர், ஹெபர்மாஸ், ரமணரின் தத்துவங்களை விளக்கியும் எழுதியுள்ளார்.
‘யாருமே முற்றிலும் தவறானவராக இருக்க முடியாது’ என்ற கருத்து கொண்டவர். ‘எல்லாம் சரியே’ என்பது இவரது அடிப்படைக் கொள்கை.
உலகம் அனைத்துக்குமான பொதுவான உண்மை என்பதே கிடையாது என்கிறார். இவரது முழுமை நோக்கு (Integral view) சமூக, கலாச்சார வேறுபாடுகளை ஏற்கிறது. இது மானுடம் அனைத்துக்குமான பொதுவான அன்பு, கருணை பற்றி விரிவாகப் பேசுகிறது. இதுபற்றிய ஆராய்ச்சி, பயிற்சிக்காக 1998-ல் ஒரு கல்வி மையம் நிறுவினார்.
‘என் கோட்பாடுகள், பொதுவாக மனதில் எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கக்கூடிய மாயக்கண்ணாடி அல்ல; அது ஒருவித வரைபடம் மட்டுமே’ என்பார்.
உள்ளுணர்வு, தத்துவம், சூழலியல், வளர்ச்சி உளவியல் பற்றி தொடர்ந்து உரையாற்றியும் எழுதியும் வருகிறார் கென் வில்பர்.