Published : 15 Jan 2015 11:37 AM
Last Updated : 15 Jan 2015 11:37 AM

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - 10

நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தவர். உண்மையில் இவருடைய பெயரும் இவரது அப்பாவின் பெயரும் மைக்கேல் கிங் என்றே இருந்தது. ஜெர்மனியின் பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவரால் கவரப்பட்ட இவரது தந்தை தங்கள் இருவரின் பெயரையும் மாற்றிவிட்டார்.

# கல்வியில் மிகச் சிறந்து விளங்கியதால், இரண்டு முறை டபுள் புரொமோஷன் பெற்று, விரைவில் கல்லூரியில் சேரும் தகுதிபெற்றார். சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

# 25-ஆவது வயதில் அலபாமாவில் பாதிரியாகப் பணிபுரியத் தொடங்கினார். 1955-ல் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமயக் கல்விக்கான முனைவர் பட்டம் பெற்றார்.

# தேசிய கறுப்பரின முன்னேற்ற கூட்டமைப்பின் தலைமைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். அமெரிக்க கறுப்பரினத்தவரின் உரிமைப் போராட்டத்திற்கு தலைமையேற்று வழி நடத்தினார் பேருந்துகளில் அனைவரும் சமமாக பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்.

# 382 நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. போராட்ட சமயத்தில் கிங் கைது செய்யப்பட்டார், இவரது வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, இறுதியாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1956-ல் பேருந்துகளில் இனப்பிரிவினை நடைபெறுவது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது

# அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவை அமைத்தார். காந்தியடிகளின் அறப்போராட்ட வழிமுறைகளால் ஈர்க்கப்பட்டார். இவற்றை விரிவாக அறிந்துகொள்வதற்காக தன் குழுவினருடன் 1959-ல் இந்தியா வந்தார்.

# இவரது போராட்டக் கொள்கைகளில் கிறிஸ்துவின் போதனைகளையும் செயல்பாட்டு யுத்திகளில் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிமுறைகளும் பிரதிபலித்தன. 1957 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் இவர் 60லட்சம் மைல் தூரம் பயணம் மேற்கொண்டு உரிமைக் குரல் எழுப்பினார்.

# 2,500 கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். எங்கெல்லாம் கறுப்பின மக்களுக்கு எதிராக அநீதி நிகழ்ந்தனவோ அங்கெல்லாம் இவர் சென்று அவர்களுக்காகப் போராடினார்.

# வாஷிங்டன் டி.சி. யில் இவர் தலைமையேற்று நடத்திய பிரம்மாண்டமான அமைதிப் பேரணியில் 2,50,000 பேர் கலந்துகொண்டனர். இங்கு இவர் “எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற உலகப் பிரசித்தி பெற்ற உரையை நிகழ்த்தினார். இவர் நடத்திய போராட்டங்களின் பலனாக, பொது இடங்கள், அமைப்புகளில் கறுப்பரின மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதை தடைசெய்யும் சிவில் ரைட்ஸ் ஆக்ட் 1964-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

# 1964-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.அப்போது இவருக்கு 35 வயதுதான். இனவெறிக்கு எதிராகப் போராடிய உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங், இனவெறிகொண்ட ஒரு வெள்ளையனால் 1968 ஏப்ரல் 4-ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x