Published : 21 Jan 2015 10:41 AM
Last Updated : 21 Jan 2015 10:41 AM

குருதி ஆட்டம் 19 - இருபத்திரெண்டாவது வெட்டு

உடையப்பனின் குரல் கேட்டு அரண்மனைக்குள் பதறி ஓடிய ‘லோட்டா’, நுழைவு வாசல் படி இடறி விழுந்தான்.

“டேய்… ‘லோட்டா’!”

மறுபடியும் அரண்மனையின் குரல் கேட்டதும் ‘லோட்டா’வுக்கு ஈரல் குலை அறுந்து விழுந்தது போல் இருந்தது.

அரண்மனை, எவரையும் ஒரு தடவை பெயர் சொல்லி அழைப்பதே அபூர்வம். கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத்தைக் கூட, “கணக்கு” என எப்போதாவது கூப்பிடுவது உண்டு. அதற்கே கணக்குப் பிள்ளையின் திரேகம் ஆடிப் போகும். அரண்மனையின் கண் ஜாடையைப் புரிந்துகொண்டு காரியமாற்றுவார். துளி பிசகாது. அந்த சாமர்த்தியம் உள்ளவன்தான் அரண்மனைக்குள்ளே காலம் தள்ள முடியும்.

‘நேத்து வந்த பயல் நான். நம்ம பேரை ரெண்டு தடவை உச்சரிக்கிறாருன்னா… சனியன் சடைப் போட்டு, உச்சந்தலை யிலே ஏறி உக்காந்துட்டான்! நம்ம சீட்டு கிழியப் போவுது. சீட்டுக் கிழிஞ்சாலும் பரவாயில்ல, ஓடி தப்பிச்சு பிழைச் சுக்கிறலாம். உசுரு தப்பிக்குமான்னு தெரியலையே! அரண்மனை… விரதம் இருந்தா என்ன? இல்லாட்டி நமக்கென்ன?

எங்கே போனாலும் நாக்குச் சனி. நம்மளை விடுதில்லையே. எல்லாம் ‘கூழு’ப் பயலாலே வந்த வினை!

முன் வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடி, உடையப்பனின் முன் னால் போய், வாய் பொத்தி நின்றான்.

“‘கூழு’ப் பயலோடு உனக்கென் னடா… பேச்சு?”

“நான் பேசல அரண்மனை. அவன் தான்…” தலைக்கு மேல் கும்பிட்டான்.

“என்ன சொன்னான்?”

“அது வந்து அரண்மனை…” வாய் வறண்டது.

கண் குத்திப் பார்த்தான் உடையப்பன்.

“திருவிழா ஏற்பாடுகளைப் பத்தி கேட்டான் அரண்மனை.”

‘லோட்டா’ சொல்வதை நம்பாத உடையப்பன், திரும்பாமலே, “அரண்மனைச் சேவகம், அம்புட்டு லேசு இல்லடா ‘லோட்டா’. இங்கே ஆயிரம் அந்தரங்கம் இருக்கும்; ரகசியங்கள் இருக்கும். இங்கே இருந்து, அரண்மனைச் சொத்து மட்டுமில்லை… அரண்மனைச் சேதியும் வெளியே போகக் கூடாது.” திரும்பினான். “என் தோட்டத்தில நிற்கிற ஒவ்வொரு தென்னை மரத்துக்குக் கீழேயும் உன்னை மாதிரி உளறு வாயன்ங்கதான் உரமா கிடக்கிறானுங்க.”

‘லோட்டா’வுக்கு மூத்திரம் முட்டியது. தப்பி தவறி இறங்கினால் இப்பவே தென்னைக்கு உரம்தான். இறுக்கினான். “உத்தரவு அரண்மனை… உத்தரவு அரண்மனை…” வார்த்தைகள் கிழிந்து விழுந்தன.

மவுனமாக அமர்ந்திருந்த உடையப் பன், இமைகளை மட்டும் உயர்த்தி, “பத்தாம் நாள் திருவிழாவில, இருளப்ப சாமிக்கு எத்தனை கிடாய் வெட்டுப் படுது?” என்றான்.

பேச்சு திசை மாறியதில் ‘லோட்டா’ வுக்கு மூச்சு வந்தது. “இருபத்தியோரு கிடாய் அரண்மனை.”

“கிடாய் வெட்டுறது யாரு?”

“காவக்கார திருமால் தேவர். ஒரு கிடாய்க்கு ஒரு வெட்டுதான். தலை துண்டா ஓடும் அரண்மனை!”

“இருபத்தியோரு கிடாய்களை வெட்டிட்டு, இருபத்திரெண்டாவதும் ஒரு வெட்டு இருக்குதுன்னு… காவக் காரத் திருமாலுகிட்ட சொல்லி வை.”

‘லோட்டா’ வாய் பிளந்து பார்த்தான்.

“இருபத்திரெண்டாவது வெட்டுப்பட போறது… கிடாய்த் தலை இல்லை. மனுசத் தலை. ஒரே வெட்டுல தலை துண்டா ஓடணும்.”

‘லோட்டா’வின் பாதம் வரை கால் நனைந்தது. ‘வகை தப்பா வந்து மாட்டிக்கிட்டியேடா ‘லோட்டா’! உன் தலைவிதி இப்பிடி இருக்கையில… என்னென்ன நெனைப்பெல்லாம் ஓடுச்சு? கணக்குப்பிள்ளை உத்தியோகமாம்… அதையும் தாண்டி, அரண்மனை வாரிசாம். நெனப்பு… பொழப்பைக் கெடுத்துருச்சேடா ‘லோட்டா’.’ கண்ணீர் ஓடியது.

“போ…” ஒற்றைச் சொல்லில் உதறினான் உடையப்பன்.

தன் உயரத்தில் பாதி ஆளாய் குனிந்தவாக்கில் தடுமாறி நகர்ந்தான் ‘லோட்டா’.

அரியநாச்சி, கப்பலை விட்டு இறங்க வேண்டிய கடைசி ஆளாய் நின்றாள்.

20 வருடங்களுக்கு முந்தைய தனுஷ்கோடி தீவுக்கரை அரியநாச்சியின் கண்ணில் அலைந்தது.

‘அரியநாச்சியின் மீது ஸ்காட்டின் கடைசிக் கோபம் கொப்பளித்தது. முன்னும் பின்னும் மாறி மாறி விழுந்த அடியில் கைப்பிரம்பு தெறித்தது. ம்..ஹூம்.. அரியநாச்சி அலுங்கலே. அத்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் துரைசிங்கம்.

கப்பலேறிய அரியநாச்சி, கரையில் நின்ற ஸ்காட்டைப் பார்த்து, “துப்பாக்கிப் போலீஸைத் துணைக்கு வெச்சுக்கிட்டு… ஒரு பொட்டச்சியை அடிக்கிற வெள்ளை நாயே! எத்தனை கடல் தாண்டி அனுப்புனாலும்… திரும்பி வருவோம்டா. வந்து… பழி தீர்ப்போம்!” துரைசிங்கத்தின் கன்னம் திருப்பி, “நேத்து வரை வாய் பேசுன இந்த பச்சப் பாலகனை ஊமையாக்கி அனுப்புறீங்களே… உங்களையும் உங்களுக்குத் துணை போன உள்ளூர் துரோகிகளையும்… இவனே வந்து அழிப்பான்டா!” கரை கேட்க கத்தினாள்.

நீர் திரண்ட கண்களால் துரை சிங்கத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அரியநாச்சி. துரைசிங்கம், இமைக்காமல்,கரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வலம்புரிச் சங்கு வடிவ தனுஷ்கோடி தீவு. அண்ணன் ரணசிங்கம், வெள்ளை ஆதிபத்தியத்துக்கு எதிரான ஆப்பநாட்டு முதல் அனற்பந்தை கொளுத்தி தூக்கிப் போட்ட தீவு. அதிகார ஜொலிப்போடு இந்தியப் பெருங்கடலில் நங்கூரம் பாய்ச்சி நின்ற ‘கிரேட் பிரிட்டன்’ கப்பலை, ரணசிங்கம் வைத்த குண்டு, சல்லி சல்லியாய் சிதறடித்த தீவு. வெள்ளை வல்லாதிக்கக் கழுகு தம்மை வெளியேற்றியபோது அடிமைப்பட்டிருந்த தீவு, இன்று சுதந்திரக் கடற்காற்று தாலாட்டும் பூமி.

கப்பலில் இருந்து இறங்கியவர்களை ஏற்றிக் கொண்ட படகு, கரையை நெருங்கி கொண்டிருந்தது. அலைகள் இல்லாத கீழைக்கடல், பெண்கடல். படகு அலுங்காமல் வந்து கொண்டிருந்தது. கரையில் குவிந்திருக்கும் கூட்டத்தில் வெள்ளை முகங்களை அதிகம் காணோம். கை அசைக்கும் முகங் களில், செட்டிநாட்டு நகரத்தார் பெரும்பாலோர். பஞ்சக்கச்ச வேட்டி கட்டி, நீள் கோட்டும் அரைஅடி உயர அடர் வண்ணத் தொப்பியும் அணிந்த கனவான்கள் நிறைய தென்பட்டனர்.

எவரும் தம்மை எதிர்கொண்டு கை அசைக்காத கரையை காண விரும்பாத அரியநாச்சி, எங்கோ பார்த்தவாறு வந்தாள். படகு நெருங்க நெருங்க, கரை சலசலத்தது. எல்லா சலசலப்புகளையும் தாண்டி கத்தினான் தவசியாண்டி, “அரியநாச்சி தாயீ…!”

- குருதி பெருகும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x