

பனி மூடிய ஒரு மாலையில் ஒரு வனத்தருகே
இந்த வனம் யாருடையது என்று
எனக்குத் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.
அவருடைய வீடு கிராமத்தில் இருந்தாலும்
பனி மூடிய அவரது வனத்தைப் பார்க்க
நான் இங்கே நிற்பது தெரியாது அவருக்கு.
இவ்வருடத்தின் மிக இருண்ட மாலைப் பொழுது இது.
வனத்துக்கும் உறைந்திருக்கும் ஏரிக்கும் இடையே
பண்ணை வீடு எதுவும் அருகில் இல்லையென்பதால்
இந்த இடத்தில் நான் நிற்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும் என்னுடைய சிறிய குதிரைக்கு.
தன் கழுத்து மணியை ஆட்டுகிறது குதிரை.
‘வழி தவறி வந்துவிட்டாயா?’ என்று கேட்கிறது போலும்
மிருதுவான பனிச் சில்லுகளின், காற்றின் ஒலி மட்டுமே
அங்கே கேட்கும் இன்னொரு ஓசை
ரம்மியமான வனம் இது;
இருளும் விரிவும் கொண்டது.
ஆனால், நான் காப்பாற்ற வேண்டிய
உறுதிமொழிகள் இருக்கின்றன.
உறங்குவதற்குள்
நான் செல்ல வேண்டிய பாதை
வெகு தூரம்.
உறங்குவதற்குள்
நான் செல்ல வேண்டிய பாதை
வெகு தூரம்.
(தமிழில்: அரவிந்தன்)
ஜவாஹர்லால் நேரு மரணப் படுக்கையில் இருந்த போது அருகில் இருந்த மேஜையில் ஒரு புத்தகம் இருந்தது. அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய ‘நியூ ஹாம்ப்ஷயர்’ எனும் கவிதைத் தொகுதி அது. அந்தத் தொகுப்பில் உள்ள மேற்கண்ட கவிதைதான் நேருவுக்கு மிகவும் பிடித்த கவிதை. அவருக்கு மிகவும் பிடித்த கவிஞரும் ராபர்ட் ஃப்ராஸ்ட்தான்.
சான்பிரான்சிஸ்கோவில் 1874 மார்ச் 26-ல் பிறந்தார் ராபர்ட் ஃப்ராஸ்ட். இளமையிலேயே எழுத்தார்வம் மிக்க ஃப்ராஸ்ட்டின் முதல் கவிதை, பள்ளிப் பத்திரிகையில் பிரசுரமானது. 1894-ல் ‘நியூயார்க் இண்டிபெண்டன்ட்’ பத்திரிகையில் அவரது கவிதை பிரசுரமானபோது, சன்மானமாக 15 டாலர்கள் கிடைத்தன. அந்தக் காலத்தில் அது பெரிய தொகை.
1912-ல் லண்டனுக்குக் குடிபெயர்ந்த அவர், ‘எ பாய்’ஸ் வில்’ எனும் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ‘நியூ ஹாம்ப்ஷயர்’ தொகுப்பு அவருக்கு முதல் புலிட்சர் விருதைப் பெற்றுத்தந்தது. புகழ்பெற்ற கவிஞராக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்வு சோகமும் இழப்பின் வலியும் நிறைந்ததாக இருந்தது. பல துயரங்களுக்கு இடையில் இறவாப் புகழ்பெற்ற கவிதைகளை எழுதினார் ஃப்ராஸ்ட்.
வாழ்வு நமக்கு வழங்கியிருக்கும் அளவற்ற சாத்தியங்கள் அவரது படைப்புகளில் வெளிப்படும். நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு கணமும் நாம் விரும்பும் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று உணர்த்தும் அவரது ‘தி ரோட் நாட் டேக்கன்’ எனும் கவிதை உலகப் புகழ்பெற்றது. புதுக்கவிதை பிரபலமடைந்த காலத்திலும் மரபுக் கவிதை எழுதியவர் ஃப்ராஸ்ட். 4 முறை புலிட்சர் விருது வென்ற ஃப்ராஸ்ட், 1963-ல் இந்த நாளில்தான் மறைந்தார்.