Published : 03 Dec 2014 02:49 PM
Last Updated : 03 Dec 2014 02:49 PM

குருதி ஆட்டம் 12 - வன ஓவியம்!

“அப்பா!”

மகள் செவ்வந்தியின் அலறல், தவசியாண்டியை உலுக்கியது. குடிசைக்கு வடக்கே, வெகுதூரக் காட்டுக்குள் இருந்தான். உயிரோடு பிடிபட்ட ஓர் உடும்பு, தவசியாண்டியின் கைப் பிடியில் இருந்து விடுபட முறுக்கிக் கொண்டிருந்தபோது தான், செவ்வந்தியின் அலறல் சத்தம் கேட்டது.

“அப்பா…!” ஒரே சத்தம்தான். மறு சத்தமில்லை.

சிறு குழந்தையாய் காட்டுக்குள் வந்ததில் இருந்து, எதைக் கண்டும் செவ்வந்தி இப்படி கத்தியதில்லை. மலை இறங்கி வரும் யானைகளும் சிறுத்தைப் புலிகளும் காட்டுப் பன்றி களும் செவ்வந்தியைக் கண்டதும் தலை கவிழ்ந்து, தடம் மாறி கடந்து போகும். படுக்கை விரிப்புக்குள் சுருண்டு கிடக்கும் நாகங்கள் கூட, புரண்டு படுக்கும் செவ்வந்தியின் திரேக பார அழுத்தத்தில் சினம் பொறுத்து, மெல்லச் சுருள் அவிழ்ந்து, ஊர்ந்து வெளியேறும். அப்படி ஓர் அபூர்வ இழை, செவ்வந்திக்கும் வனஜீவராசிகளுக்கும் இடையே ஊடாடிக் கிடக்கும். விஷம் கக்கும் நாகங்களையும் அடித்துக் கொல் லும் விலங்குகளையும் விட கொடூரமான எதைக் கண்டு அவள் கத்துகிறாள்?

இடது கையில் உடும்போடும் வலது கையில் சூரிக் கத்தியோடும் குடிசையை நோக்கி ஓடக் கிளம்பினான். தார்ப் பாய்ச்சி இறுக்கிக் கட்டியிருந்த வேட்டி அவிழ்ந்தது. உடும்பை தூர எறிந்தான். சூரிக் கத்தியைக் குறுக்கு வசமாய் வாயில் கவ்வினான். அவிழ்ந்த வேட்டியைத் தார்ப் பாய்ச்சி இறுக்கிக் கட்டினான். காட்டுச் செடிகள் முறிபட ஓட்டம் எடுத்தான்.

“ஹாய்… கஜா!”

“சொல்லு அனு.” பிடறியின் பின்புறம் நிற்பவளை திரும்பிப் பார்க்காமலே பேசினான் கஜேந்திரன்.

“ஏய்… திரும்பிப் பாரேன்!” கஜேந்திர னின் தோளைத் தொடப் போனாள்.

“ஏய்ய்…” திரும்பாமலே எச்சரித்தான்.

தோளைத் தொட நீட்டிய கையை, அரைபாதி சுருக்கி கஜேந்திரனின் சுருள்முடி அழகை ரசித்தபடி நின்றாள்.

சட்டகமிட்ட அரை ஆள் உயர துணிப் பதாகையில், வலதுகைத் தூரிகையால் வண்ணம் குழைத்து, அருங்காட்சி ஒன்றை ஓவியமாக்கிக் கொண்டிருந்தான். கஜேந்திர மயக்கத்தில் நின்ற அனு, அவன் தலை தாண்டி ஓவியத்தைக் கண்ணளந்தாள். தூரிகைத் தொடும் இடமெல்லாம் உயிர் முளைத்தது.

வெண்மையும் இளஞ்சிவப்பும் கரும்பச்சையும் கலந்து அடர்ந்த மலைவனம். பஞ்சாய் நுரை பொங்க, வனம் கீறிப் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். இரு பக்க மலை முகடு தொட்டுச் சிறகு விரித்து, வெள்ளப் பெருக்கை எதிர்த்துப் பறக்கும் ஓர் ராட்சச வினோதப் பறவை. பறவையின் தலை, மனிதத் தலை.

அருகில் இருந்து அடிக்கடி பார்த்த தலை போல் இருக்க, அனு இடது புறமாக நகர்ந்து முன்னே வந்து, கஜேந்திரனின் முகம் பார்த்தாள். மாறி, பறவையின் முகம் பார்த்தாள். அசப்பில், கஜேந்திர முகம். உற்று விழி நோக்கினாள். கஜேந்திரனின் இமை ஆடாத கருவிழி, தூரிகைப் போக் குக்கு அசைந்து கொண்டிருந்தது. உயிர் மறந்து ஓவியத்துக்குள் உருகிக் கொண்டிருந்த முகம், இதழ் விரியும் பூவைப் போல் மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருந்தது.

அனு, தூரிகையின் நுனி பார்த்தாள். சிகரம் தொட்டுப் பறக்கும் கஜேந்திரப் பறவையின் முதுகில், பளிங்குப் பச்சை நிறப் பொன்வண்டு ஒன்று அமர்ந்திருந்தது. பொன்வண்டின் முகம், சாந்தி தவழும் பெண்முகம்.

வண்டின் முகத்தில் தன் முகம் தெரிகிறதா? என உற்று உற்றுப் பார்த் தாள். தன்னோடு உள்ளதுதான், தன் முகமா? அல்லது வண்டின் முகம், தன் முகமா? அறை முழுக்க சுற்றும் முற்றும் பார்த்தாள். கஜேந்திரனின் தாய் பொம்மியும் பாட்டி வெள்ளையம்மாவும் தூரிகை ஓவியங்களாக சுவரில் தொங்கிக் கொண்டிருந்தார் கள். கதவை திறந்து அடுத்த அறைக்கு ஓடினாள். ஆளுயர நிலைக் கண்ணாடி முன் போய் நின்றவள், முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தாள். வண்டின் முகம் போல் தன் முகம் இல்லையே! வெளிறிப் போனாள்.

திரும்ப ஓவிய அறைக்குள் ஓடி வந்தாள்.

கஜேந்திரன், ஓவியத்தை வரைந்து முடித்திருந்தான். அருகில் வந்து நின்ற அனுவை இப்போதுதான் பார்த்தவ னாய், “ஹாய்… அனு! எப்போ வந்தே?” என்றான்.

அனுவுக்கு ‘சுரீர்’ என்றது.

“ஓவியம் எப்படி இருக்கிறது அனு?”

அனு பேசாமல் நின்றாள்.

“அடுத்த மாதம் லண்டன் கிங்ஸ்டன் யுனிவேர்சிட்டியில் எனக்குப் பதிலாக… இந்த ஓவியம்தான் பேசும்.” இரண்டு கைகளாலும் ஓவியச் சட்டகங்களைப் பற்றிக் கொண்டு கம்பீரமாக நின்றான் கஜேந்திரன்.

“சொல்லு அனு. எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கு.”

“உன் ரசனை இவ்வளவுதானா?”

“உன் ஓவியங்களுக்கு நான் ஒரு ‘மாடலிங் கேர்ள், என் ரசனை இவ்வளவுதான்.”

“ஏய்… என்னாச்சு உனக்கு?”

“பின்னே என்ன? அந்தப் பறவை யாரு… நீதானே?”

ஓவியப் பறவையை உற்றுப் பார்த் தவன், “என்னை மாதிரியா இருக்கு?” என்றான்.

“உன் மேல் உட்கார்ந்திருக்கிற பொண்ணு யாரு?”

அறையின் முகடு நோக்கி பலக்கச் சிரித்தான்.

“அது… பொண்ணு இல்ல. பொன்வண்டு!”

“பொன் வண்டா… பெண் வண்டா?”

“சரி… பெண் வண்டு!”

“யார் அந்தப் பெண்?”

“என் காதலி!”

“காதலியா… அப்போ நான்?”

அனுவை ஏற இறங்க பார்த்த கஜேந்திரன், “ஏய்… அனு! இதென்ன விபரீத ஆசை. நீ என்னோட ‘மாடலிங் கேர்ள், அவ்வளவுதான். தப்பு… அனு. தப்பு!” ஜன்னலோர வானம் பார்த்துப் பேசினான்.

“சரீரம் சார்ந்த காதல், யாரோடும் எனக்கு இதுவரை இல்லை. ஓவியம் தான் என் காதலி. ஓவியமே ஒரு பெண்ணாய் பிறந்திருந்தால், அவளை நான் காதலிப்பேன் - என்னை அவள் காதலிக்காவிட்டாலும்!” திரும்பினான்.

அறையை விட்டு வெளியேறிப் போயிருந்தாள் ‘மாடலிங் கேர்ள்’அனு.

வன ஓவியமாய் குடிசை வாசலில் நின்றாள் செவ்வந்தி.

கையில் கம்புகளோடு ஓடைக்கரை ஏறியவர்கள், அலறல் சத்தம் கேட்டதும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் திகைத்து நின்றார்கள். நல்லாண்டி எல்லோரையும் கை அமர்த்தினார்.

வடக்கே இருந்து ஓடி வந்து கொண்டி ருந்தான் தவசியாண்டி. “யார்ரா… நீங்க?”

“தவசியாண்டி… நாங்க வேற யாருமில்லை. பெருங்குடி ஆளுகதான்… வந்திருக்கோம்.” நின்ற இடத்தில் இருந்து கத்தினார் நல்லாண்டி.

- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x