ஒரு நிமிடக் கதை - எடை

ஒரு நிமிடக் கதை -  எடை
Updated on
1 min read

ரயிலுக்காகக் காத்திருந்தார் மாதவன்.

எடை பார்க்கும் மெஷின் கண்ணில்படவே, ஏறி நின்று ஒரு ரூபாய் காசைப் போட்டார். ஒரு மாற்றமும் இல்லை. மெஷின் அமைதியாக இருந்தது.

‘சே..’ என்று அலுத்தபடி பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார். “மெஷின் கொஞ்சநாளா ரிப்பேரா இருக்கு சார்.. யாரும் கவனிக்க மாட்டேங் கறாங்க. போடுற காசெல்லாம் வேஸ்ட் ஆயிடுது” என்றார் கடைக்காரர்.

அதே சமயம் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினார் மாதவன். ஒரு கிராமத்து தம்பதி மெஷின் பக்கம் வந்தார்கள். பக்கத்தில் சென்று அவர்களை எச்சரிப்பதற்குள் அவர்களுடைய சின்ன மகள் மெஷினில் ஏறி காசு போட்டாள். சிறிது நேரம் கழித்து, “அப்பா... சீட்டு வரல!” என்று சிணுங்கினாள்.

அவனும் தட்டிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான். “சரி.. வா, போகலாம்..!” என்று அவன் மனைவி இழுத் தாள். “இரு..” என்று சொல்லிவிட்டு சுற்றிப் பார்த்தான். சாமான் பேக் செய்து வந்த அட்டைப் பெட்டி கிடந்தது.

பாக்கெட்டில் இருந்து பால்பாய்ன்ட் பேனாவை எடுத்து ‘ரிப்பேர்’ என்று கொட்டை எழுத்தில் எழுதினான். பக்கத்தில் கிடந்த சணல் கயிறை எடுத்து அட்டையை மெஷினில் சேர்த்துக் கட்டிவிட்டு கிளம்பினான். பார்த்துக் கொண்டிருந்த மாதவன் கொஞ்சம் அவமானமாக உணர்ந்தார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in