Published : 27 Dec 2014 10:00 AM
Last Updated : 27 Dec 2014 10:00 AM

லூயி பாஸ்டர் 10

நோய்க் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் மனித குல நன்மைக்குப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 பிரான்ஸில் பிறந்தவர். சிறு வயது முதலே நாட்டுப் பற்றும் இயற்கை மீதான ஆர்வமும் கொண்டவர். மிகவும் பிடித்தது அறிவியல், ஓவியம். ரசிக்கும் அனைத்தையும் ஓவியமாகத் தீட்டி மகிழ்வார்.

 அறிவியலில் பட்டம் பெற்று, ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்தார். ஒயின் தயாரிப்பாளரான நண்பருக்கு உதவி செய்ய 1856-ல் எதேச்சையாக ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.

 கிருமிகள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். ‘பாலை புளிக்கச் செய்வதும் ஒருவகை பாக்டீரியாதான். அதை குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் வைத்தால் பெரும்பாலான கிருமிகள் அழிந்துவிடும்’ என்பதைக் கண்டறிந்தார். தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படு கிறது. இது அவரது பெயரால் ‘பாஸ்ச்சரைசேஷன்’ என்று அழைக்கப்படுகிறது.

 இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீராத நோய்கள் என்று அதுவரை அறியப்பட்ட சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும், நோய் தீர்க்கவும் மருந்துகள், கிருமி நாசினிகள் கண்டறியப்பட்டன.

 கிருமி பற்றிய இவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை மருத்துவ உலகம் உணர்ந்தது. காசநோய்க் கிருமிகளையும் வெப்பத்தால் அழிக்கமுடியும் என்பதை மருத்துவர்கள் கண்டனர். உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க் கும் மருந்து கிடைத்தது. கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்து கண்டறிந்தார்.

 வெறிநாய்க் கடியால் உண்டாகும் ராபிஸ் நோய் பற்றி ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிக்காக, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வெறிநாய்களைக் கொண்டு ஆபத் தான பல சோதனைகளை மேற்கொண்டார். ஆய்வு முடிவில், தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார்.

 இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டறிந் தனர் விஞ்ஞானிகள்.

 பிரான்ஸின் மிகச் சிறந்த குடிமகன் என்ற கவுரவம் அவருக்கு அளிக்கப்பட்டது. ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். பல கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மட்டுமின்றி, விண்ணில் உள்ள சில கோள்கள், நிலவின் பள்ளங்களுக்குகூட இவர் பெயர் சூட்டப்பட் டுள்ளது.

 19-ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் மக்களின் சராசரி ஆயுட்காலம் இரட்டிப்பாகி உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் லூயி பாஸ்டருக்கும் முக்கியமான பங்கு உள்ளது. அவரது மருத்துவப் பங்களிப்பு, உலகம் முழுவதும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது; காப்பாற்றிவருகிறது.

 வாழ்நாள் இறுதிவரை மனிதகுல நன்மைக்காக உழைத்த உன்னத விஞ்ஞானி லூயி பாஸ்டர் 73-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x