இன்று அன்று | 1956 டிசம்பர் 2: கரைசேர்ந்தது ‘கிரான்மா’

இன்று அன்று | 1956 டிசம்பர் 2: கரைசேர்ந்தது ‘கிரான்மா’
Updated on
1 min read

தோல்வியுற்ற ஒரு புரட்சி அது. எனினும், கியூபாவின் வரலாற்றை மாற்றியமைத்த மாபெரும் நிகழ்வும் அதுதான்.

கொலம்பஸ் வருகைக்குப் பின்னர், ஸ்பெயினின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட கியூபா, 1898-ல் அமெரிக் காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் நடந்த போருக்குப் பின்னர் அமெரிக்காவின் வசம் வந்தது. 1902-ல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் கியூபாவில் குறையவில்லை. கியூபாவின் விவசாய நிலங் களில் முக்கால்வாசியை அமெரிக்க நிறுவனங்கள் கூறு போட்டுக்கொண்டன.

அமெரிக்க அரசுக்கும் முதலாளிகளுக்கும் ஆதரவாக இருந்த கியூப அதிபர் பாடிஸ்டா மீது மக்களிடையே எதிர்ப்புணர்வு எழுந்தது. பாடிஸ்டா ஆட்சிக்கு எதிரான புரட்சியை நடத்த ஃபிடல் கேஸ்ட்ரோ தலைமையில் சே குவேரா, ரால் கேஸ்ட்ரோ போன்றவர்கள் தயாரானார்கள். அப்போது அந்தப் புரட்சிப் படை மெக்சிகோவில் இருந்தது. அமெரிக்காவில் கப்பல் நிறுவனம் நடத்திவந்த மெக்சி கோகாரர் ஒருவரிடம் இருந்து, ‘கிரான்மா’ என்ற படகை வாங்கினார்கள்.

60 அடி நீளம் கொண்ட அந்தப் படகில் மொத்தம் 12 பேர்தான் பயணிக்கலாம். ஆனால், அதில் கேஸ்ட்ரோ, சே குவேரா உட்பட 82 பேர் பயணித்தார்கள். மெக்சிகோவின் டக்ஸ்பான் துறைமுகத்தில் இருந்து, 1956 நவம்பர் 25 அன்று நள்ளிரவு புறப்பட்டது புரட்சிப் படை. பல சிரமங் களைக் கடந்து வந்த அந்தப் படகு, டிசம்பர் 2-ம் தேதி, கியூபாவின் ஓரியெண்ட் மாகாணத்தின் நிகெரோ என்ற பகுதியின் கடற்கரையை வந்தடைந்தது ‘கிரான்மா’, திட்டமிடப்பட்டதை விட இரண்டு நாட்கள் தாமதமாக! அவர்கள் கொண்டுவந்த ஆயுதங்களின் எடை அதிகமாக இருந்ததாலும், அவற்றைக் கரைக்குக் கொண்டுசெல்லத் தோதான இடத்தைத் தேர்வுசெய்வதில் ஏற்பட்ட குழப்பமும் இந்தத் தாமதத்துக்குக் காரணம்.

கரைசேர்ந்த வீரர்கள், சியர்ரா மேஸ்ட்ரா என்ற மலைப் பகுதிக்குச் சென்றார்கள். காத்திருந்த பாடிஸ்டாவின் படையினர், இவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பலர் கொல்லப்பட, இறுதியில் 19 பேர்தான் மிஞ்சினார்கள். சிலர் கைதுசெய்யப்பட்டார்கள். அதன் பின்னர் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்குப் பிறகு, 1959 ஜனவரி 1-ல் பாடிஸ்டாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. பாடிஸ்டா போர்ச்சுகல் நாட்டுக்குத் தப்பிச் சென்றார். கியூபாவின் பிரதமரானார் ஃபிடல் கேஸ்ட்ரோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in