

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது துயரம் தோய்ந்த சம்பவம் ஒன்று.
டொமினிக்கன் குடியரசு நாட்டைச் சேர்ந்த மரியா தெரஸா மிராபெல், மினர்வா மிராபெல், பேட்ரியா மிரபெல் ஆகிய மூன்று சகோதரிகள் (மிராபெல் சகோதரிகள்) 1960-ல் இதே நாளில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். டொமினிக்கன் குடியரசின் அதிபர் ரஃபேல் ட்ருஹியோ சர்வாதிகார ஆட்சியில் மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்தனர். நாட்டின் வளங்களைச் சுரண்டி, ட்ருஹியோவும் அவரது ஆதரவாளர்களும் பதுக்கினார்கள். வெளிப்பார்வைக்கு ஜனநாயகத்தை அங்கீகரிப்பவர்போல் வேடமிட்ட ட்ருஹியோ, எதிர்க் கட்சிகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். ஆனால், தனக்கு எதிரானவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களைக் கொன்றழிப்பதுதான் அவரது மறைமுகத் திட்டம். அவருக்கு எதிரானவர்களைக் கண்டறிந்து கொல்ல ‘தி 42’ என்ற பெயரில் ஒரு குழுவே இயங்கியது. இவரை எதிர்த்துதான் அந்தச் சகோதரிகள் குரல்கொடுத்தனர்.
சற்று வசதியான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்களுக்குப் போராட்ட குணத்தை அளித்தவர், அவர்களது உறவினர் ஒருவர். மினர்வா சட்டம் பயின்றவர். அவரை ஆசைநாயகியாக வைத்துக்கொள்ள விரும்பிய ட்ருஹியோ அவரை அணுகினார். ஆனால், அதற்கு மினர்வா எதிர்ப்பு தெரிவித்ததால், வழக்கறிஞராகப் பணிபுரிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே, ட்ருஹியோவின் அடியாட்கள் செய்த படுகொலை நிகழ்வை நேரில் பார்த்த பேட்ரியா, தனது சகோதரிகளுடன் இணைந்து போராட்டத்தில் இறங்கினார். அந்தப் பெண்களின் கணவர்களும் அவர் களுடன் இணைந்து போராடினார்கள். அவர்கள் அனை வரும் கைதுசெய்யப்பட்டபோது, உலக அளவில் ட்ருஹி யோவுக்கு எதிர்ப்பலை எழுந்தது. பின்னர் மூன்று சகோதரி களும் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது கணவர்கள் விடுவிக்கப்படவில்லை. சிறையில் இருந்த அவர்களைக் காண 1960-ல் இதே நாளில் மூன்று சகோதரிகளும் காரில் சென்றார்கள். திரும்பி வரும் வழியில் காரை நிறுத்திய ட்ருஹியோவின் அடியாட்கள் மூன்று பெண்களையும், கார் ஓட்டுநரையும் கொடூரமாகக் கொன்றார்கள். விபத்துபோல சித்தரிக்க, உடல்களை அதே காரில் வைத்து மலையிலிருந்து தள்ளிவிட்டார்கள். 1961-ல் ட்ருஹியோ அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்ட பின்னர்தான் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
அந்தச் சகோதரிகளின் நினைவாகத்தான், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 1999-ல் இந்த நாளை அதிகாரபூர்வமாக ஐ.நா. அறிவித்தது. மிராபெல் சகோதரிகளின் கதை ‘இன் தி டைம்ஸ் ஆஃப் பட்டர்ஃப்ளை’ என்ற பெயரில் நாவலாகவும், திரைப்படமாகவும் உருவாக்கப்பெற்றது. 2001-ல் வெளிவந்த திரைப்படத்தில் மினர்வாவின் வேடத்தில் சல்மா ஹேயக் நடித்திருந்தார்.