Published : 13 Nov 2014 10:33 AM
Last Updated : 13 Nov 2014 10:33 AM

பி. சுசீலா 10

தென்னிந்திய திரை உலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலாவின் பிறந்த நாள் இன்று. அவரை பற்றிய அரிய முத்துகள் பத்து...

 ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசை யில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரா வின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.

 பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாட வைத்தார். 1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னைக் கண் தேடுதே…’ பாடல்களால் பிரபலமடைந்தார்.

 பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜிக்கி போன்ற பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பின்னணி உலகில் இந்த இளம் பாடகியின் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. தனித்தன்மை வாய்ந்த தன் குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் ஹிட் பாடல்களை அளித்த இந்த இசையரசியின் ஆட்சி, அரை நூற்றாண்டுகள் தொடர்ந்தது.

 1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம். சவுந்திரராஜன், கன்னடத்தில் பி.பி. நிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. குறிப்பாக, டி.எம். சவுந்திரராஜனுடன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.

 தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

 5 முறை தேசிய விருதுகள், பத்ம பூஷன் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில அரசினர் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என பல மொழிப் படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

 இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து வந்தார். தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

 பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

 ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்த நாளான நவம்பர் 13 அன்று இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வரும் வருவாயில், வறுமையில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர பென்ஷன் தொகையை அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x