Published : 11 Nov 2014 10:25 AM
Last Updated : 11 Nov 2014 10:25 AM

ஆச்சார்ய கிருபளானி 10

காந்தியத்தை பரப்பிய ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானியின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10.

 சிந்து மாகாணத்தின்(பாகிஸ்தான்) ஹைதராபாத்தில் பிறந்தவர். அதே ஊரில் மெட்ரிகுலேஷன் வரை படித்தார். பிறகு மும்பை வில்சன் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி முதல்வர்,

 `இந்தியர்கள் பொய்யர்கள்' என்று கூறியதற்காக மாணவர்களை ஒன்று திரட்டி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத் தில் ஈடுபட்டதால் கல்லூரியி லிருந்து நீக்கப்பட்டார். பின்னர் புனே ஃபர்கூசன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை முடித்தார்.

 முஸாஃபர்பூர் கல்லூரி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும், மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராகவும் பணியாற்றினார். மகாத்மா காந்தியின் கொள்கைகளில் பெருமதிப்பு வைத்திருந்த இவர், வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாகவே திகழ்ந்தார்.

 ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு, பலமுறை சிறை சென்றுள்ளார். 1934 முதல் 1945 வரை இந்திய தேசிய காங்கிரன் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1946ல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இத்தனை பதவிகளை வகித்து வந்தாலும் இவர் தன்னை எப்போதுமே முன்னிறுத்திக்கொள்ளாமல், பின்னணியிலேயே சேவையாற்றி வந்தார்.

பனாரஸ் ஹிந்து கல்லூரியில் பணியாற்றி வந்த சுசேதாவைத் திருமணம் செய்து கொண்டார். சுசேதா கிருபளானி பின்னாளில் உத்தரபிரதேசத்தின் முதல் பெண் முதலமைச்சரானார்.

இந்தியா சுதந்தரம் அடைந்த பின் பிரதமர் பதவிக்காக காங்கிரசில் நடைபெற்ற தேர்தலில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வாக்குகளைப் பெற்றார்.

 இவருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும் காங்கிரஸிலிருந்தும் விலகினார். க்ருஷக் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

 பிறகு இந்தக் கட்சி பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியுடன் இணைக்கப்பட்டது. இவர் 1952, 1957, 1962, 1967-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1954-ல் கட்சியிலிருந்து விலகி அதையடுத்த ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்தார்.

 அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் சமூக, சுற்றுச்சூழல் நலன்களுக்காகவும் பணியாற்றி வந்தார். வினோபா பாவேவுடன் இணைந்து காந்தியத்தைப் பரப்பி வந்தார். காந்தீய கொள்கைகளைக் குறித்த புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

 பழுத்த அனுபவசாலியான கிருபளானி, நாடாளு மன்றத்தில் எந்தக் கட்சியையும் சாராமலேயே மதிப்பு வாய்ந்த எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டார். இவர் 94-ஆம் வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x